மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

பெண் காவலர் தற்கொலை!

பெண் காவலர் தற்கொலை!

திருச்சி மகளிர் தனிச்சிறையில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கடந்த நான்கு நாட்களில் மட்டும் மூன்று போலீசார் தற்கொலை செய்துகொண்டது காவல் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி. இவர் திருச்சி மகளிர் தனிச்சிறையில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இவர் சிறை வளாகத்திலுள்ள காவலர்கள் குடியிருப்பில் தங்கியிருந்தார். நேற்று (பிப்ரவரி 3) இரவு இவர் பணிக்குச் செல்லவில்லை. இதனை அறிந்த சக காவலர்கள், செந்தமிழ் செல்வி வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பல முறை தட்டியபோதும் செந்தமிழ் செல்வி கதவைத் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டினுள், தூக்கில் தொங்கிய நிலையில் செந்தமிழ் செல்வி சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் போலீசார். செந்தமிழ் செல்வி மரணம் குறித்து அக்கம்பக்கத்தினர், அவருடன் பணியாற்றுபவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் கே.கே.நகர் போலீசார்.

முதற்கட்ட விசாரணையின்போது, செந்தமிழ் செல்வி தமிழகச் சிறைத் துறையில் பணியாற்றும் காவலர் ஒருவரைக் காதலித்தது தெரியவந்தது. இருவரும் உயிருக்குயிராகக் காதலித்துவந்த நிலையில், திடீரென்று செந்தமிழ் செல்வியைக் கைவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய அந்த நபர் சம்மதித்துள்ளார். காதலருக்கு நாளை மறுநாள் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அறிந்து, செந்தமிழ் செல்வி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் போலீசார்.

கடந்த 1ஆம் தேதியன்று திருச்சி சிறப்பு காவல் படையைச் சேர்ந்த முத்து, பிப்ரவரி 3ஆம் தேதியன்று சென்னை ஏடிஜிபி அலுவலகத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவங்களின் தாக்கம் மறைவதற்குள் செந்தமிழ் செல்வியின் தற்கொலை காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon