மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

கருப்பு பணம்: ஆடிட்டர் பரிந்துரை தள்ளுபடி!

கருப்பு பணம்: ஆடிட்டர் பரிந்துரை தள்ளுபடி!

கருப்பு பண மீட்பு தொடர்பான ஆடிட்டர் குருமூர்த்தி தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளைப் பரிசீலிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கான ஆலோசனைகளை வழங்க ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவைச் சேர்ந்த அலுவல் சாரா உறுப்பினரான குருமூர்த்தி தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பெங்களூரு இந்திய மேலான்மைக் கல்வி நிறுவன நிதித் துறைப் பேராசிரியர் வைத்தியநாதன், மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

2011ஆம் ஆண்டு இந்த குழு சில பரிந்துரைகளை வழங்கியது. “அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களின் விவரங்களைப் பெற வேண்டும்; அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களைப் பெறுவதற்கு ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்; அதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தைக் கண்டறிய வேண்டும்” என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் அடங்கியிருந்தன.

இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி மத்திய நிதி அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்றும், அதற்கான உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரியும் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஆர்.நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 4) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் வரிகள் வாரியம் விசாரணை நடத்தி வருவதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதனால், மேற்கொண்டு எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon