மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு!

பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு!

பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்களித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு ஒசூர் அருகே உள்ள பாசனூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடை செய்யக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய காலக்கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஜனவரி 11ஆம் தேதி விசாரித்த நீதிபதி பார்த்திபன், பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என அறிவித்துப் பிறப்பித்த தீர்ப்புக்குத் தடைவிதிக்கவோ, நிறுத்திவைக்கவோ முடியாது எனக்கூறி முன்னாள் அமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு இன்று (பிப்ரவரி 3) விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon