மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 பிப் 2019

‘ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டுற அன்புதான் கடவுள்!’

‘ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டுற அன்புதான் கடவுள்!’

வாடிப்பட்டி ‘அன்பே கடவுள்’ மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் காட்டும் வாழ்க்கை தரிசனம்!

கட்டுரையும் படங்களும்: முத்துராசா குமார்

ஒருபுறம் தென்னந்தட்டியை மறைவாக எடுத்து வைத்து வெள்ளாட்டுக்குப் பிரசவம் பார்க்கப்படுகிறது. மறுபுறம் வயர் கூடைகள் பின்னுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், பழுதடைந்த சேர்களுக்கு நரம்பு கட்டுதல், ஊதுவத்திகள், பினாயில் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த வேலைகள் அனைத்தையும் செய்பவர்கள் பார்வைத் திறனற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குட்டிக்கரடு என்ற பகுதியில் இருக்கிறது ‘அன்பே கடவுள்’ மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம். 1997இலிருந்து செயல்பட்டுவரும் இந்த இல்லத்தில் கைவிடப்பட்ட பார்வைத் திறனற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள் என்று சுமார் 40க்கும் மேலானோர் வசித்து வருகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் என்று அனைத்தும் இலவசமான இந்த இல்லத்தில் தங்களது சுய தொழில்கள் மூலமாக அனைவரும் தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

மதுரை புறநகர் சிற்றூர்கள் மற்றும் வாடிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் சமூகத்தாலும், குடும்பங்களாலும் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் பெரும் அடைக்கலமாகத் திகழ்கிறது ‘அன்பே கடவுள்’ இல்லம். உடல் ஒச்சங்களால் ஒடுக்கப்படும் இந்த மக்களிடம் தன்னம்பிக்கையை உண்டாக்கி, அரசின் சலுகைகளை முறையாகப் பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அவர்களின் கல்வி, திறமைகளுக்கு ஏற்ப சுய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதுதான் இந்த இல்லத்தின் மைய நோக்கமே. மேலும் நிர்கதியான குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பியும் வருகின்றனர். பலதரப்பட்ட இடையூறுகளைத் தாண்டி இந்த இல்லம் தான் வகுத்துக்கொண்ட நோக்கங்களில் வெற்றியும் கண்டு வருகிறது.

‘அன்பே கடவுள்’ இல்லத்தை நடத்தி வரும் ஆசைத்தம்பி (வயது 62) சோழவந்தானைச் சேர்ந்தவர். முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தச் சமூகப் பணியில் ஈடுபட்டுவரும் ஆசைத்தம்பி, இந்தப் பணியில் தான் ஈடுபட்டதன் பின்னணியைப் பகிர்ந்துகொண்டார்.

“அடிப்படையில நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பவே வீட்ல பட்டம் படிக்க வெச்சாங்க. கண்ணு தெரியாதவங்க, மாற்றுத்திறனாளிகளை முன்னாடியெல்லாம் பார்த்தா அப்படியே கடந்து வெலகிப் போயிடுவேன். என் நண்பர் மூலமாகத்தான் இவங்களோட உலகத்துக்குள்ள நான் நுழைய ஆரம்பிச்சேன். அவருக்கும் கண் தெரியாது. அவரோட வேலைகளுக்கு நான் கூடஇருந்து உதவ ஆரம்பிச்சேன். கண்ணு தெரிஞ்சவங்க, பார்வை இல்லாதவங்களை ஏமாத்துனதை அந்தக் காலகட்டத்துல நேரடியா பார்த்தேன். அந்தக் காட்சி என் மனசுல ஒருவித பாதிப்பை உண்டாக்குச்சு. படிப்படியா அவுங்களுக்கு உதவ ஆரம்பிச்சு ஒருகட்டத்துல கைவிடப்பட்ட பார்வைத்திறன் இல்லாதவங்க, உடல் ஊனமானவங்களோட வாழ்வாதாரங்களை அவுங்களுக்கு அமைச்சுத் தரணும்னு முழுநேரமா என்னை களப்பணியில ஈடுபடுத்திக்கிட்டேன்” என்றார்.

‘அன்பே கடவுள்’ என்னும் இல்லத்தை முறையாகப் பதிவு செய்து தொடங்கியிருக்கிறார் ஆசைத்தம்பி. “இந்த உலகத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டுற அன்புதான் கடவுள். எங்க அப்பா எந்தக் கடிதம் எழுதினாலும் பிள்ளையார் சுழிக்குப் பதிலா ‘அன்பே கடவுள்’னுதான் போட்டு எழுதத் தொடங்குவார். சின்னப் புள்ளையில இருந்து அதைப் பார்த்திருக்கேன். அதனாலதான் இல்லத்துக்கு ‘அன்பே கடவுள்’னு பேரு வெச்சேன். சுத்துவட்டார கிராமங்களுக்குப் போய் குடும்பத்தால கைவிடப்பட்ட பார்வை இல்லாதவங்க, மாற்றுத்திறனாளிகள், அப்பா அம்மா இல்லாத புள்ளைங்களைக் கணக்கெடுத்தோம். அம்மா அப்பா இருந்தும் அநாதையா சுத்துற புள்ளைங்களும் இருக்காங்க” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“ஒரு காலத்துல வீட்டுக்கு நல்லா சம்பாதிச்சு கொடுத்திருப்பாரு இடையில ஏதோவொரு விபத்துல அவரு மாற்றுத்திறனாளியாகி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பாரு. அந்த நிலை கொடூரமானது. வருமானம் போய், மரியாதை போய், பாசம் போய் விரக்தியாகி வீட்டைவிட்டு வெளியேறிடுவாங்க. இப்படியும் நிறைய மனிதர்கள் இருக்காங்க. இவுங்க எல்லோர் வீட்லையும் நேரடியா போய் பேசிப் பார்த்தும், இவுங்கள வீட்டு ஆளுங்க ஏத்துக்காதப் பட்சத்துல அவுங்களையெல்லாம் இல்லத்துக்குக் கூட்டிட்டு வந்துருவோம். ‘எங்க வேணும்னாலும் கூப்பிட்டு போங்க. மாசம் எங்களுக்கு எவ்ளோ பணம் தருவீங்க’ என்று கேட்ட குடும்பத்தார்களும் இருக்காங்க. குளிக்கிறது, நடக்குறது, சாப்பிடறதுன்னு முதல்ல அவுங்களோட அன்றாடத்தை அவுங்களே பாத்துக்கிறதுக்கு பயிற்சி அளிப்போம்.

அப்பறமா திறமைகள், ஈடுபாடுகளைக் கண்டுபிடிச்சு அவுங்களுக்கு உண்டான சுய தொழில்களை ஏற்படுத்தி தர்றோம். குப்பைகள், பாட்டில்கள் பொறுக்கிட்டு இருந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புறோம். பக்கத்துல இருக்குற பள்ளிகளுக்குப் போய் இல்லத்தைப் பத்திச் சொல்லி உதவி கேட்போம். அந்தக் குழந்தைங்க சாப்பிட வெச்சிருக்குற சில்லறைகளைத் தருவாங்க. ரேஷன் கடைகள்ல அரிசி, பருப்பு வாங்கிக்கிருவோம். வெளிநாடுகள்ல இருந்தோ இல்ல பெரிய நிறுவனங்கள்ல இருந்தோ காசெல்லாம் வரல. ஊர் சுத்துவட்டாரத்துல இருக்குற முப்பது, நாப்பது பேரு தங்களோட சொந்த விருப்பத்தின் அடிப்படையில, தங்களோட மன திருப்திக்கு கையில இருந்து நூறு, ஆயிரம்னு கொடுப்பாங்க. அந்தத் தொகையை வங்கில சிறுக சேமிச்சு இல்லத்தை நடத்திக்கிட்டு இருக்கோம். போக்குவரத்து, மருத்துவம்னு அவசர காலங்கள்லயும் அந்த நண்பர்கள்தான் உதவிட்டு வர்றாங்க.

வயர் கூடை, பினாயில், ஊதுவத்திக்கு உண்டான மூலப்பொருட்களை வாங்கி கொடுத்துட்டா அவுங்க அதை உற்பத்தி பண்ணி வெளியில விக்கிறதுக்கு அனுப்புறாங்க. அதுல கெடைக்கிற வருமானத்த வெச்சு அவுங்க செலவுகள், சேமிப்புகளைப் பார்த்துக்குவாங்க. மூலப்பொருள் முதலீடா மட்டும் முப்பது ரூபாயை தனியா எடுத்து வெச்சுருவாங்க. காலப்போக்குல அவுங்களோட தன்னம்பிக்கையும், சேமிப்பும் பலமாகும்போது அவுங்க விருப்பத்தின் படியே கல்யாணம் செஞ்சு வைக்கிறோம். அப்படி நாலஞ்சு பேரு வெளியில போய் குடும்பமா யாரையும் சாராம சந்தோஷமா வாழ்ந்துட்டு வர்றாங்க. பொருளாதாரத்துல நம்ம யாரையும் அண்டி இல்ல, நம்மளால இனிமேல் நல்லபடியா, தைரியமா வாழ முடியும்னு நம்பிக்கை வரும்போது அவுங்க தாராளமா வெளியில போய் சுயமா வாழ்க்கையைத் தொடங்கலாம். தொடங்குறாங்க.

ஆண், பெண், திருநங்கை, சாதி, மதம், வயசுன்னு எந்த வேறுபாடும் இல்லாம உடல் ஊனத்த வெச்சு ஒடுக்கப்படுற மக்களுக்கு அடையாள அட்டை வாங்கிக் கொடுத்து, பொருளாதார ரீதியா யாரையும் எதிர்பார்க்காத அளவுக்கு அவுங்கள முன்னேற்றுவது... வங்கிக் கடன், பயணம், மருத்துவம், வேலைவாய்ப்புன்னு இவுங்களுக்கு உண்டான அரசோட சலுகைகளை வாங்கித் தர்றது... இவையெல்லாந்தான் எங்களோட முக்கிய இலக்கே. அந்த இலக்கைக் கொஞ்சம் கொஞ்சமா நெருங்கிட்டே வர்றோம். தீபாவளி, பொங்கல்னு நல்ல நாட்கள்ல இல்லத்துல இருக்குற வீட்டு ஆளுங்களுக்கு எப்படியாவது தகவலைச் சொல்லி வரவழைக்க முயற்சி செய்வேன். ஆனால், யாருமே வர மாட்டாங்க. இவுங்களும் வீட்ட நெனச்சு வருத்தப்பட்டு இருக்கும்போது எல்லாரும் சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா, ஒரு குடும்பமா கொண்டாட்டத்தை உருவாக்கிருவாங்க. உள்ளூர் மக்களும் இவுங்களுக்கு ரொம்ப ஆதரவா இருக்குறாங்க. பஸ் ஸ்டாண்ட்ல மாற்றுத்திறனாளிகள் யாராவது திக்குத்தெரியாம நின்னுக்கிட்டு இருந்தா இங்க அழைச்சிட்டு வந்துருவாங்க. என்னோட வீட்ல இருந்ததைவிட, இல்லத்துலதான் நான் அதிகமா இருந்திருக்கேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்” என்று ஒரு பெருங்குடும்பத்தின் தந்தையாக உணர்வுபூர்வமாகப் பேசினார் ஆசைத்தம்பி.

“எனக்கு அப்பா இல்ல. அம்மா கட்டட வேலைப் பார்த்தாங்க. எனக்குப் பிறவில இருந்தே நடக்க வராது. என்னோட வீட்ல என்மேல பாசமாதான் இருந்தாங்க. ஆனால், இந்த பாசமும், அரவணைப்பும் இல்லாம கண்ணு தெரியாம, உடல் ஊனமா, அநாதைப் புள்ளைங்களா எத்தனையோ பேர் இங்க இருக்குறாங்க. அவுங்களுக்கு யார் இருக்கா? அந்த வலி எனக்குத் தெரியும். அதுனாலதான் என்ன மாதிரி இருக்குற மக்களுக்கு உதவ வீட்டை விட்டு வெளிய வந்துட்டேன். எங்க ஆசைத்தம்பி சார் படாத கஷ்டமெல்லாம் பட்டு நாங்களும் நாலு பேரு மாதிரி நல்லா வாழணும்னு இந்த இல்லத்தை நடத்திட்டு வர்றாரு. கண்டிப்பா அவரு ஆசைப்படுற மாதிரி வாழத்தான் போறோம். எங்களை மாதிரி வாழ முடியாதவங்களை வாழ வைக்கத்தான் போறோம்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார் ராஜலெட்சுமி (வயது 48). இல்லம் தொடங்கியதிலிருந்து இங்கு வசிக்கும் ராஜலெட்சுமி திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.

வெளியிலும், சமூக வலைதளங்களிலும் துளியளவு விளம்பரங்கள் இல்லாமல் தென்மாவட்டத்தின் ஒரு மூலையில் இருந்துகொண்டு, சமூகத்தில் பெரும் செயலை நிகழ்த்திவருகிறது ‘அன்பே கடவுள்’ இல்லம். உலகத் தகவல்கள் தீயாகப் பரவும் இன்றைய சூழலிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகளைப் பற்றி எதுவும் தெரியாமல் விழிப்புணர்வற்று இருக்கும் பொது மக்களும், மாற்றுத்திறனாளிகளும் கிராமப் பகுதிகளில் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி தன்னைச் சுற்றியும், தன் ஊரைச் சுற்றியும் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க எவ்வித சமரசமுமின்றி, சுயநலமுமின்றி தன் வாழ்நாளில் பாதியைக் கடந்தும் தனிமனிதனாய் போராடிவருகிறார் ஆசைத்தம்பி.

நீங்கள் கடந்து செல்லும் போது சாலையிலோ இல்லை அடைபட்ட ஏதோவொரு வீட்டுக்குள் இருந்தோ ஒரு மாற்றுத்திறனாளியின் அழுகுரல் கேட்கும்போது ‘அன்பே கடவுள்’ இல்லத்தையும், இவரையும் தொடர்புகொள்ளலாம் (9994945960).

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

திங்கள் 4 பிப் 2019