மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

ஐசிசி தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!

ஐசிசி தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்த நிலையில் ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 122 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.

பேட்ஸ்மேன்கள் தரவரிசை யில் விராட் கோலி 887 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்க ரோஹித் சர்மா 854 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 10ஆவது இடத்தில் ஷிகர் தவண் (744) உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற எம்.எஸ். தோனி 3 இடங்கள் முன்னேறி 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்திலிருந்து, 9ஆவது இடம் வரை முறையே நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், இங்கிலாந்தின் ஜோய் ரூட், பாகிஸ்தானின் பாபர் ஆஸம், தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ், மே.இ.தீவுகள் வீரர் ஷாய் ஹோப், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், பாகிஸ்தானின் பக்கர் ஜமான் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 808 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 719 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், 709 புள்ளிகளுடன் யுஜ்வேந்திர சஹல் ஒரு இடம் முன்னேறி 5ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உள்ளார்.

கேதார் ஜாதவ் 8 இடங்கள் முன்னேறி 35ஆவது இடத்தில் உள்ளார். முகமது ஷமிக்கு 30ஆவது இடம் கிடைத்துள்ளது. வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் 6ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா 7ஆவது இடத்திலும் உள்ளனர். 8 முதல் 10 இடங்கள் வரை இங்கிலாந்து வீரர் அடில் ரஷித், முஜிப் ரஹ்மான், ஜோஷ் ஹேசல்வுட் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் 10 இடங்களில் எந்த இந்திய வீரர்களும் இல்லை.

டி20 போட்டியில் கப்டில் விலகல்!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அவரது காயம் குணமாக ஓய்வு தேவைப்படுவதால் இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து மார்டின் கப்டில் நீக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon