மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

எச்ஐவி தொற்று: மனைவியைக் கொல்ல முயற்சித்த கணவர்!

எச்ஐவி தொற்று: மனைவியைக் கொல்ல முயற்சித்த கணவர்!

எச்ஐவி தொற்றிய காரணத்தினால் வீட்டுக்குள் வரக்கூடாது என்ற தடை விதித்த மனைவியைக் கணவர் கொல்ல முயன்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி வள்ளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் அவரது மனைவியோ, குழந்தைகளோ பாதிக்கப்படவில்லை. இதனை அறிந்த வள்ளி, முருகனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தார்.

இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார் முருகன். இன்று (பிப்ரவரி 4) காலையில் தனது வீட்டுக்குச் சென்ற முருகன், வள்ளியிடம் தனது ஆதார் அட்டையை எடுத்துத் தருமாறு கூறியுள்ளார். அதனைக் கேட்டு, அவரும் வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அவர் முகத்தில் மிளகாய் பொடி வீசி, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். அதன்பின், முருகன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

இருவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், நடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருவரும் உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்தப் பெண்ணுக்குத் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செலுத்தப்பட்ட விவகாரம், சில நாட்களுக்கு முன்னர் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. எச்ஐவி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon