மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

காந்தி அவமதிப்பு: விசிக போராட்டம்!

காந்தி அவமதிப்பு: விசிக போராட்டம்!

காந்தியின் 71ஆவது நினைவுநாளான ஜனவரி 30ஆம் தேதி இந்து மகாசபையினர் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள நவ்ரங்கபாத்தில், காந்தியின் உருவ பொம்மையை சுட்டுக் கொண்டாடினர். மேலும், காந்தியின் உருவபொம்மையை எரித்தும், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (பிப்ரவரி 4) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காந்தியடிகளின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமதித்த இந்து மகாசபை பொறுப்பாளர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மகாசபை அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் காந்தி நினைவுநாளில் அவரை இந்து மகாசபையினர் அவமானப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக, அந்த அமைப்பின் தேசிய அளவிலான பொறுப்பாளர் பூஜா சகுண் பாண்டே காந்தி உருவ பொம்மையை சுட்டும், நாதுராம் கோட்சேவுக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் தனது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா என்றால் காந்தி என்று கருதக்கூடிய அளவுக்கு உலகமே எண்ணும் விதமாக, அவரை தேசத் தந்தையாக இந்த நாடு போற்றி வருகிறது. மகாத்மாவாகப் போற்றுகிறது. அவரோடு கருத்து முரண்கள் உண்டு. காந்தியடிகளுக்கும், அம்பேத்கருக்கும் நேருக்கு நேர் கருத்து மோதல்கள் நடந்துள்ளன. சனாதனத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் காந்தி என்று அம்பேத்கர் அவரை விமர்சித்திருக்கிறார். ஆனாலும் இந்திய சுதந்திர போராட்டத்துக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

காந்தி இந்தியாவின் அடையாளம். காந்தியை சுட்டு கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்று பின் இந்து மகா சபை உறுப்பினரானவர். அவரது வாரிசுகள் இன்று மீண்டும் ஆயுதங்களுடன் வலம் வருகிறார்கள். சங் பரிவார் அமைப்பினர்தான் கவுரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோரை வீடு தேடி சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்” என்றார்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon