மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 பிப் 2019

இயற்கையை முந்த கலைஞனால் முடியுமா?

இயற்கையை முந்த கலைஞனால் முடியுமா?

(முகப்பு படம்: அருண் - தாளமுத்து)

இளைஞர்களின் கலைக் கண்காட்சி: ஒரு பார்வை - 4

மதரா

வித்தியாசமான கருப்பொருள்களில் சிற்பங்களை உருவாக்குவதில் தாளமுத்து முக்கியமானவர். கடந்த ஆண்டு நடைபெற்ற கலைக் கண்காட்சியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கும் ரேவதி என்பவருக்குச் சிலை எடுத்திருந்தார்.

தற்போது சென்னை பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெறும் கலைக் கண்காட்சியிலும் அவரது படைப்புகள் வித்தியாசமாக அமைந்திருந்தன. ஒரு பெரிய அளவிலான மனித காதில் செடி முளைத்திருப்பது போல் ஒரு சிற்பத்தை காட்சிக்கு வைத்திருந்தார் தாளமுத்து. அதுபற்றி அவரிடமே கேட்டோம்.

“கேட்டுக் கேட்டு தானே வளர்கிறோம். பிறந்ததிலிருந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் எனப் பலரும் நம்மிடையே நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். அந்த வார்த்தைகள் நமக்குள் விதையாய் முளைக்கத் தொடங்குகின்றன. அதை விளக்கும் வகையில் காதை டெரகோட்டா சிற்பமாக உருவாக்கி அதில் செடியை முளைக்கச் செய்தேன். முதலில் செடியையும் சிற்பமாக உருவாக்க எண்ணினேன். ஆனால் ஒரு செடி இயற்கையாய் முளைத்து வருவதற்கு இணையாக எந்தப் படைப்பையும் உருவாக்கிவிட முடியாது என்பதால் அதில் செடியை நட்டினேன்” என்றார்.

தாளமுத்துவின் மற்றொரு படைப்பும் இதே பாணியில் அமைந்திருந்தது. திறந்துள்ள புத்தகம் ஒன்றில் செடி முளைத்து வருவது போல் உருவாக்கியிருந்தார். புத்தகம் என்பதை அவரது கல்லூரியுடன் ஒப்பிடுகிறார். “எனக்குக் கல்லூரி வாழ்க்கைக் கற்றுக்கொடுத்தது ஏராளம். திறமையை வளர்த்துக்கொள்ளும் இடமாக மட்டுமல்லாமல் பசி, நட்பு, பாசம் என இங்கு நான் பலவற்றைப் படித்தேன். ஊரில் இருந்தவரைப் பெற்றோர்களின் மதிப்பு தெரியவில்லை. சென்னை வந்தபின் தான் அவர்கள் பாசத்தையே புரிந்துகொள்ள முடிந்தது. கல்லூரி எனக்குள் வளர்த்த ஏராளமான விஷயங்களின் குறியீடாகத் தான் இந்தச் சிற்பத்தை உருவாக்கினேன்” என்றார்.

கலைஞனுக்கு எதிர்காலம் பற்றிய கனவுகள் ஒருபக்கம் இருந்தாலும் கடந்த காலத்தின் நினைவுகளும் அதிகம் இருக்கும். தாளமுத்துவிடம் பழையன பற்றிய ஏக்கங்களும் உள்ளன. அதற்கு உதாரணமாக அஞ்சல் அட்டைகளைக் காட்சிக்கு வைத்துள்ளார். அவற்றில் நமது முகவரியை எழுதினால் அதில் ஓவியம் வரைந்து அனுப்புவதாகக் கூறுகிறார்.

பார்வையாளர்களுடன் ஒரு கலைஞன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பாக இதைப் பார்க்கலாமா என்று கேட்டோம். அதற்கு அவர், “தொழில்நுட்ப யுகத்தில் நாம் அவசரமாகக் கைவிட்டு வருபவற்றில் ஒன்று அஞ்சல் அட்டை. அஞ்சலகத்தில் கேட்டுப் போனாலே உடனடியாக கிடைப்பதில்லை. நாம் அதில் அனுப்புகிற செய்தியை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். வழக்கொழிந்து வரும் இந்த முறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் என்ன என்ற சிறு யோசனையின் பேரில் இதைக் காட்சிக்கு வைத்தேன். பார்வையாளர்கள் விருப்பமுடன் தங்களது முகவரிகளை எழுதிச் செல்கின்றனர். முகநூல் மூலம் கடிதம் எப்போது வரும் என விசாரிக்கிறார்கள். கண்காட்சி முடிந்ததும் வரும் எனக் கூறியுள்ளேன். தனக்கு எந்த ஓவியம் வரும் எனப் பார்வையாளர்கள் காத்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறதல்லவா..”என்றார்.

அஞ்சல் அட்டை எப்போது வரும் என மெசஞ்சரில் கேட்டுக்கொள்வது நகை முரணாக இருந்தது. முகவரியை எழுதிக்கொடுத்துவிட்டுத் தான் வந்தோம்.

கோவிலுக்கு முன் இருக்கும் பலி பீடம் போல் அரங்கின் முன் பலிபீடம் போன்று அமைத்து ஒரு செம்மறி ஆட்டின் தலை இருந்தது. அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் அருகில் சென்று பார்த்த போது வியப்பை அடக்கமுடியவில்லை. மரத்தை இளைத்து நீண்டு வளைந்த கொம்புடன் அசல் செம்மறி ஆட்டின் தலையை உருவாக்கியுள்ளார் அருண்.

உயிர்ப்பலி எனத் தலைப்பிடப்பட்டுள்ள காகிதம் அந்தப் பலிபீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதுவும் மரத்தினால் செய்யப்பட்டது தான் என்று மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

“தெய்வங்களுக்கு வழங்கப்படும் உயிர்ப் பலியை விமர்சிக்கும் விதமாக இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளேன். வருடத்திற்கு ஒரு முறை பலியிடுதல் நடைபெற்றாலும் ஆயிரக்கணக்கான கோவில்களில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்படுகின்றன. கடவுள் இருக்கிறதா இல்லையா என்ற விவாதத்துக்குள் இப்போது செல்லவில்லை. கோவில் புனிதம் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தும் இடமாக மனதை ஒரு நிலைப் படுத்தும் விதமாக இருக்கிற கோவில்களில் உயிர்ப் பலி வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறேன். நமது தீய எண்ணங்களைக் குணங்களை பலியிடுவதற்குத் தானே பலி பீடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

கோவில்களில் உயிர்களைப் பலியிடுவதை தடுப்பதற்குப் பின்னால் மத அரசியல் உள்ளது என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் வைக்கப்படுகிறது. இருப்பினும் ஒரு ஆட்டின் பார்வையிலிருந்து பார்த்தால் உயிர்ப்பலி கொடுமையானது தானே என அருண் எழுப்பும் கேள்வியில் உயிர்நேயம் பிரதிபலிக்கிறது.

(கலைக் கண்காட்சிக்கு வருகை தந்து இயக்குநர் பா.இரஞ்சித் கலைஞர்களோடு உரையாடியது குறித்து காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்)

பெண் என்றால் பூ மட்டும் தானா?

நினைவுகளைக் கலையாக்கும் கலைஞர்!

சமூகக் கொடுமைகளுக்குக் கலைஞனின் எதிர்வினை!

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

திங்கள் 4 பிப் 2019