மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

விருப்ப மனு வாங்கிய ஓபிஎஸ் மகன்!

விருப்ப மனு வாங்கிய ஓபிஎஸ் மகன்!

அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி இன்று துவங்கியது. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத்தும் விருப்ப மனுவை வாங்கிச் சென்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எந்நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் ஆகியவற்றிற்கு குழு அமைத்து தேர்தலுக்கான பணிகளை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டன. இந்த நிலையில் மற்ற கட்சிகளை முந்திக் கொண்டு விருப்ப மனுக்கள் பெறுவதற்கான தேதியை அறிவித்தது அதிமுக.

அதன்படி, 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்கள் வழங்கும் பணியை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (பிப்ரவரி 4) தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இருவரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் பணிகளையும் துவக்கி வைத்து அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கினர்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். குறிப்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு வாங்கிச் சென்றுள்ளார் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேன் ராமநாதபுரம் அல்லது வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மத்திய சென்னையில் போட்டியிடுவதற்கும் விருப்ப மனு வாங்கிச் சென்றுள்ளனர். இதுபோல முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோரும் விருப்ப மனு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

பன்னீர்செல்வம் மகன் விருப்ப மனு வாங்கியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் சார்பிலும் விருப்ப மனு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சர் எம்.சி.சம்பத் தனது மகனையும், சி.வி.சண்முகம் தனது சகோதரரையும் களமிறக்கத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென்சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யவுள்ளார்.

வரும் 10ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன . அதன்பிறகு அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளர்களை தேர்வு செய்யவுள்ளது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon