மும்பையில், பப்ஜி விளையாட்டை ஆடுவதற்குப் புதிய செல்போன் வாங்கிக் கொடுக்காததால், 18 வயது வாலிபர் ஒருவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை நேரு நகரில் உள்ள குர்லா பகுதியில் வசித்து வந்த 18 வயதான வாலிபர், ஆன்லைன் விளையாட்டான பப்ஜி விளையாடுவதற்காக ரூ.37,000 மதிப்புள்ள புதிய செல்போன் வாங்கித் தருமாறு தன் பெற்றோரை வற்புறுத்தியுள்ளார். அவருடைய பெற்றோர், “வேண்டுமானால் 20,000 ரூபாய்க்கு செல்போன் வாங்கித் தருகிறோம்” என்று கூறியுள்ளனர். அந்த வாலிபர் தொடர்ந்து வலியுறுத்தியபோதும், அவரது விருப்பத்தை ஏற்க மறுத்தனர். இதனால், மனமுடைந்துபோன அந்த வாலிபர் சமையல் அறையில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இணையத்தில் பலர் ஒன்றிணைந்து ஒரேநேரத்தில் ஆடும் விளையாட்டான பப்ஜி மிகவும் ஆபத்தானது. இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாகச் சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர் தப்புபவர் வெற்றி பெறுவார்.
இந்த ஆன்லைன் விளையாட்டினால் குழந்தைகள் தேர்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், இதனைத் தடை செய்ய வேண்டும் என்றும் பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தெரிவித்தனர். பப்ஜி விளையாட்டைத் தடை செய்யுமாறு, 11 வயதான மாணவர் ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.