மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

சிறப்புப் பார்வை: இளையராஜாவின் செயற்கை மறதி!

சிறப்புப் பார்வை: இளையராஜாவின் செயற்கை மறதி!

இராமானுஜம்

இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பண வரவையும், இளையராஜாவுக்கு பண வரவுடன் கூடிய பாராட்டு மழையையும் வழங்கியிருக்கிறது.

திரையுலகில் வளர்ந்த பின், நட்சத்திர அந்தஸ்தை அடைந்த பின் தொடங்கிய இடத்தைத் திரும்பி பார்ப்பதும், தொடக்கத்துக்கு காரணமாக இருந்தவர்களையும் பெரும்பான்மையானவர்கள் நன்றி உணர்வுடன் நினைவுகூர்வது அரிதாகிவருகிறது. இளையராஜாவின் 42 ஆண்டு காலத் திரையுலக இசைப் பயணத்தை வெற்றிகரமாக பயணிக்க அடித்தளமிட்டுக் கொடுத்தவர் தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அமரர் பஞ்சு அருணாச்சலம்.

தமிழ் சினிமாவில் சாதனை புரிந்த இளையராஜா நேற்றைய நிகழ்ச்சியில் தனது இசை குரு டி.வி. கோபாலகிருஷ்ணனை மேடையேற்றி அறிமுகம் செய்து ஆசிர்வாதம் வாங்கினார். அதன் பின் திரைப்பயணத்தில் தனக்கு ஆதர்சமாக, துணையாக இருந்தவர்களின் புகைப்படங்களை வரிசைப்படுத்தி அவர்களைப் பற்றிப் பெருமையுடன் கூறினார். ஆனால், அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தை நினைவுகூரவும் பெருமைப்படுத்தவும் இல்லை. அவர் அப்போது வாய்ப்பு வழங்கவில்லை என்றால் இளையராஜா இந்த நிலையை எட்டுவதற்குத் தாமதமாகியிருக்கும்.

அன்னக்கிளி என்ற படத்தின் பாடல்கள் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் யார் அந்த இளையராஜா என்று கேட்க வைத்த படத்தின் தயாரிப்பாளர் அமரர் பஞ்சு அருணாச்சலம். அவர் இல்லை என்றாலும் அவர்களது குடும்பத்தினரை மேடையேற்றி கெளரவப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை விழா நடத்திய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இளையராஜாவும் செய்யத் தவறினார்கள்.

இசைத் திறமை மட்டும் இருந்தால் போதாது அழகிய பாடல் வரிகளும், மக்கள் ரசிக்கும்படியான காட்சியமைப்புகளும் இடம் பெற்றால் மட்டுமே அது வெற்றிகரமான திரைப்படமாகும் என்பது இளையராஜாவுக்கு தெரியாமல் இல்லை. தனது வளர்ச்சிக்கானவர்கள் எனப் பட்டியலிடப்பட்டதில் அவர் எந்த இயக்குனரையும் அடையாளப்படுத்தவில்லை. இது ஒரு வரலாற்றுப் பிழை. உலகம் அறிந்த, அவரது வளர்ச்சிக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர்களையும் பாடலாசிரியர்களையும் இளையராஜா நினைவுகூரவே இல்லை.

உடனிருந்து உழைத்து அவர் உயர்வுக்கு உரமிட்ட சொந்த சகோதரனையும் இருட்டடிப்பு செய்த கொடுமையும் அங்கே அரங்கேறியது.

கங்கை அமரனை இளையராஜா கண்டு கொள்ளாதது ஏன்?

பாரதிராஜாவும் - வைரமுத்துவையும் இருட்டடிப்பு செய்யப்பட்டது ஏன்?

நாளை...

இளையராஜா 75: கரை சேர்த்த கமல்

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon