மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சின்னதம்பி கும்கியாக மாற்றப்படாது: அரசு உறுதி!

சின்னதம்பி கும்கியாக மாற்றப்படாது: அரசு உறுதி!

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை தடாகம், கணுவாய், பன்னிமடை கிராமங்களில் சுற்றி வந்த சின்னதம்பி யானை, கடந்த 25ஆம் தேதி தமிழக வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு டாப் ஸ்லிப் காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது. மீண்டும் 31ஆம் தேதியன்று ஊருக்குள் புகுந்த சின்னத்தம்பி யானை, கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே தஞ்சமடைந்தது. தற்போது அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில், சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 4) பிற்பகல் நீதிபதிகள் சுப்பிரமணிய பிரசாத், மணிக்குமார் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்றும், 2 கும்கி யானைகள் மூலம் சின்னதம்பி யானையை காட்டுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். “தற்போது அமராவதி பகுதியில் நடமாடும் அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப இரு கும்கி யானைகள் மற்றும் யானைகள் நிபுணர் அஜய் தேசாய், வனத் துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். எனவே மனுதரார் கூறுவது தவறு” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஏற்கனவே மதுக்கரை மகாராஜா என்ற யானையைப் பிடித்து கும்கியாக மாற்றும்போது அது இறந்துவிட்டது. தற்போது சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற அரசு முயற்சிக்கிறது” என்று தெரிவித்தார்.

“எல்லா யானைகளையும் கும்கி யானைகளாக மாற்ற முடியாது. முதலில் முதுமலை வனப்பகுதிக்கு அந்த யானையை அனுப்பத் திட்டமிட்டோம். யானையைச் சிறை பிடிப்பதை கடைசி வாய்ப்பாகப் பயன்படுத்துவோம். இதுவரை யானையைப் பிடித்து கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை.வனப்பகுதிக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம். இரு யானைகள் குட்டியுடன் வந்தன. அவற்றைத் திருப்பி அனுப்பியபோது, சின்னத்தம்பி யானை மட்டும் திரும்பி ஊருக்குள் வந்துவிட்டது. மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. கும்கியாக மாற்ற பல பயிற்சிகள் வழங்கப்படும். தற்போது சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

“இது தொடர்பாக நிபுணர்கள் கருத்தை அறிந்துகொள்ள வேண்டும். யானையைத் தூக்க ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தியது கவலை அளிக்கிறது. இதனால் யானை காயமடைந்துள்ளது. அமைச்சர் தெரிவித்த கருத்து செய்தியாக வந்துள்ளது” என்று தெரிவித்த நீதிபதிகள், இது குறித்துத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon