மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

அரசியலமைப்பு மீறல்: மம்தாவை எச்சரிக்கும் ராஜ்நாத் சிங்

அரசியலமைப்பு மீறல்: மம்தாவை எச்சரிக்கும் ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தின் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநிலத்தில் அரசியலமைப்பு மீறப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். இது போன்ற சூழ்நிலையில் அமைதியைப் பராமரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த நேற்று (பிப்ரவரி 2) மாலை சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது சிபிஐ அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல், கைது செய்து பிறகு விடுவித்துள்ளனர் போலீசார்.

இந்நிலையில், மேற்கு வங்க அரசைப் பழிவாங்கும் நோக்கில் பிரதமர் மோடி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று குற்றம்சாட்டி அம்மாநில முதல்வர் நேற்று மாலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் காவல் துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருணாமூல் காங்கிரஸ் தொண்டர்களும் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. "எங்கள் போராட்டம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் எதிரானது அல்ல, மோடி அரசின் அட்டூழியங்களுக்கு எதிரானது என்றும், ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் போராட்டம் பிப்ரவரி 8ஆம் தேதி வரை தொடரும்” என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க அங்கு மத்திய படைகளை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”அரசியலமைப்புச் சட்ட உத்தரவுகள் அனைத்தும் மேற்கு வங்கத்தில் மீறப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ”அரசியல்வாதிகளுடன் காவல் ஆணையரும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் என்னதான் நடக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளார். தொடர்ந்து ஆளுநரிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு ரகசிய அறிக்கையும் வந்துள்ளது.

இதைதொடர்ந்து இன்று (பிப்ரவரி 3) நாடாளுமன்றத்தில் பேசிய ராஜ்நாத் சிங், மேற்கு வங்கத்தில் அரசியலமைப்பு மீறப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுபோன்று நாட்டில் எந்த மாநிலத்திலும் அசாதாரணமான சூழ்நிலை நிலவினாலும், அங்கு அமைதியைப் பராமரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே திருணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பலத்த கூச்சலுக்கு மத்தியில் பேசிய அமைச்சர் முன்னெப்போதும் இல்லாத வகையில், சிபிஐ அமைப்பினர் தங்களது பணிகளை மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர் என்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மேற்கு வங்க ஆளுநர், தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon