மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கைதிகளின் சம்பளப் பிடித்தம் சட்ட விரோதம்!

கைதிகளின் சம்பளப் பிடித்தம் சட்ட விரோதம்!

கைதிகளின் ஊதியத்தில் 50 சதவிகிதத்தை உடை மற்றும் உணவுக்காகப் பிடித்தம் செய்வது சட்ட விரோதமானது என்று கூறி, அதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் விதியைச் சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

“தமிழகச் சிறை விதி 481ஆவது பிரிவின்படி, சிறைக் கைதிகளின் ஊதியத்தில் 50 சதவிகிதம் அவர்களின் உணவு மற்றும் உடைக்காகவும், 20 சதவிகிதம் சிறைக் கைதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகைக்காகவும் பிடித்தம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 30 சதவிகிதத் தொகை மட்டுமே கைதிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இது சட்ட விரோதமானது. கேரளாவில் கைதிகளின் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதில்லை. அதனால், தமிழகச் சிறை விதி 481ஐ சட்ட விரோதமானது என அறிவித்து, சிறைக் கைதிகளின் ஊதியத்தில் 75 சதவிகிதத்தை அவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று ராஜா தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (பிப்ரவரி 4) நடைபெற்றது. “கைதிகளின் ஊதியத்தில் 50 சதவிகிதத்தை உணவுக்குப் பிடித்தம் செய்வது சட்ட விரோதமானது. ஒருவரைக் கட்டாயப்படுத்திப் பணி செய்ய வைத்து, அதற்கான ஊதியம் வழங்காததை ஏற்க முடியாது. சிறை விதி எண் 481 அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கைதிகள் ஊதியத்தில் நியாயமான முறையில் குறைந்த தொகையைப் பிடிக்க வேண்டும்” என நீதிபதி தெரிவித்தார். குறைந்த தொகையைப் பிடித்தம் செய்வதற்கான உத்தரவை அரசு வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது