மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

வேலூரில் தோல் பூங்கா!

வேலூரில் தோல் பூங்கா!

தோல் தொழில் துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது.

தோல் ஏற்றுமதிக்கான கவுன்சில் சார்பில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தோல் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில், வேலூர் மாவட்டத்தில் மெகா தோல் தொழில் துறை பூங்கா அமைக்கப்பட வேண்டுமென்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவ்வாறு மிகப்பெரிய பூங்கா அமைந்தால், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சிறிய, நடுத்தர தோல் தொழில் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் பலன் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வகச் சோதனை மையம், தயாரிப்புப் பொருட்கள் வடிவமைப்பு மையம் ஆகியன இங்கு இடம்பெறும் என்றும், சுமார் ரூ.350 கோடி மதிப்பீட்டில் இந்தப் பூங்கா அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தோல் ஏற்றுமதி கவுன்சில் தெற்கு மண்டலத் தலைவர் இஸ்ரார் அகமது இதுகுறித்துப் பேசுகையில், இந்தப் பூங்கா தோல் தொழில் துறைக்கு மிகப்பெருமளவில் ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “இதன் மூலமாக நம் நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் அளவில் தமிழகத்திலிருந்து மேற்கொள்ளப்படும். இந்தத் திட்ட நடைமுறைகள் குறித்து தோராயமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மாநில அரசு இதற்கு நேர்மறையான பதிலைத் தந்துள்ளது. விரைவில் இந்தத் திட்டம் செயல்வடிவம் பெறும்” என்று அவர் கூறினார்.

சென்னை, பேரணாம்பேட்டை, வாணியம்பாடி, ராணிப்பேட்டை, ஆம்பூர் உட்படத் தமிழகத்தின் பல இடங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர தோல் தொழில் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாகக் காலணிகள், பைகள் உட்படப் பல்வேறு தோல் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பூங்கா அமைவதன் மூலமாக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, போலந்து உட்படப் பல்வேறு நாடுகளில் இந்தியத் தோல் பொருட்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார் இஸ்ரார் அகமது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon