மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்காமல் விஷால் என்ன செய்கிறார்?

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்காமல் விஷால் என்ன செய்கிறார்?

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டதாகவும், இதனால் சிறு படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் இயக்குநர் வசந்தபாலன் கூறியுள்ளார்.

கந்து வட்டி பிரச்சினையால் தமிழகத்தில் பல உயிரிழப்புகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பிரச்சினையைப் பேசும் விதமாக உருவாகியுள்ளது ‘பொது நலன் கருதி’ திரைப்படம். அறிமுக இயக்குநர் சீயோன் இயக்கியுள்ள இந்தப் படம் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியீடு நேற்று (பிப்ரவரி 4) நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர் மிஷ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய வசந்தபாலன், “சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கின்றன. காலையில் திரையரங்குக்குச் சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் எனக் கூறிதானே பதவிக்கு வந்தார்கள். ஆனால், தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்சினையில்லாமல் வெளியாகின்றன. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்றுகொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடியுங்கள். இல்லையென்றால் தமிழ்த் திரையுலகத்தை இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதான். எனது ஜெயில் படம் வெளியாகும்போது இது நடந்தால் நான் என்ன செய்வது? சிறு பட்ஜெட் படங்களை இயக்குபவர்கள் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களை நோக்கி நகர வேண்டிய சூழல் உருவாகும்” என்று பேசினார்.

பின்னர் பேசிய இயக்குநர் மிஷ்கின், “துப்பறிவாளன் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் விஷால் பதவிக்கு வந்தார். இரவு பகலாக அவர்கள் தமிழ் ராக்கர்ஸைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டதை நான் பார்த்தேன். ஜெயில் படம் வெளியாகும். நாங்கள் அதை தலைமேல் வைத்துக் கொண்டாடுவோம்” என்று கூறினார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon