மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஆறுமுகசாமி ஆணையம்: இன்றும் ஆஜராக மாட்டார் ஓபிஎஸ்?

ஆறுமுகசாமி ஆணையம்: இன்றும் ஆஜராக மாட்டார் ஓபிஎஸ்?

ஜெயலலிதா மரண மர்மத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராவது ஏற்கனவே சிலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இன்று பிப்ரவரி 5ஆம் தேதி ஆஜர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இன்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அதிகபட்ச வாய்ப்புகள் இல்லை என்றே நாம் விசாரித்த வரையில் தகவல்கள் கிடைக்கின்றன. தமிழக பட்ஜெட் வரும் 8ஆம் தேதி தாக்கல் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிற நிலையில் தமிழக நிதியமைச்சராகவும் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம்தான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இதுதொடர்பாக பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 8.2.2019 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். அன்று காலை 10.00 மணிக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்” என்று தெரிவித்துள்ளார். துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் பணிகள் இருப்பதால் இன்று பன்னீர்செல்வம் ஆணையத்தில் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆணையத்தில் ஆஜராகப் போவது யார் என்பதுபற்றி ஒரு நாள் முன்னதாகவே எதிர்த்தரப்பான சசிகலா தரப்புக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போதுதான் அவர்கள் குறுக்கு விசாரணை செய்வதற்குத் தயாராக முடியும். அந்த வகையில் நேற்று இரவு வரை, ஓ.பன்னீர்செல்வத்தின் வருகை சசிகலா தரப்புக்கு உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே இன்றும் பன்னீர், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக மாட்டார் என்றே தெரிகிறது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon