மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கமலைக் கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகள்!

கமலைக் கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகள்!

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காகப் பிரதான கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் ஆகியவற்றுக்குக் குழு அமைத்து அதிமுக, திமுக இரண்டும் தங்களது பணிகளை ஆரம்பித்துவிட்டன. மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், இன்னும் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் பொள்ளாச்சி அலுவலகத்தில் இன்றும் நாளையும் (பிப்ரவரி 5, 6) கோவை உள்ளிட்ட 11 மக்களவைத் தொகுதிகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள் களப்பணி மதிப்பாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளார்.

இதற்காக நேற்று (பிப்ரவரி 4) கோவை வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தற்போது சொல்ல முடியாது. அதற்கான அவசியமும் அவசரமும் தற்போது இல்லை. கூட்டணி குறித்து நிர்வாகிகள் கூறிய கருத்துகளையும் இங்கு கூற முடியாது. ஆனால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

கஜா புயல் பாதிக்கப்பட்டபோது பிரதமர் வரவில்லை. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அடிக்கடி கூட்டம் நடத்துகிறார்களே என்ற கேள்விக்கு, “இதற்குக் காரணம் தேர்தல்தான். மக்கள் நலன் அல்ல” என்று பதிலளித்தார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு, “கூட்டணி குறித்து பிரதான கட்சிகளிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இங்கு விவாதிக்க முடியாது” என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon