மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

த்ரில்லரில் தொடரும் உதயநிதி

த்ரில்லரில் தொடரும் உதயநிதி

மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் பாணியில் உதயநிதி ஸ்டாலின் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகும் கண்ணை நம்பாதே படத்தில் இணைந்துள்ளார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு. மாறன் இயக்கும் இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் நேற்று (பிப்ரவரி 4) பூஜையுடன் தொடங்கின.

நிகழ்வின் போது செய்தியாளர்களைச் சந்தித்த மு.மாறன், “என் முதல் படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்கள் படத்தை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அது தான் ‘கண்ணை நம்பாதே’ படத்தை எழுத என்னை உந்தியது. உதயநிதி ஸ்டாலின் சார் ஸ்கிரிப்ட்டை கேட்டு விட்டு உடனடியாக படத்தை ஒப்புக் கொண்டார். புது ஐடியாக்களை திறந்த மனதுடன் வரவேற்று என் கதையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் வி.என். ரஞ்சித் குமாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

முதல் படத்துக்கும், 'கண்ணை நம்பாதே' படத்துக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கூறுகள் என்பது வேண்டுமானால் பொதுவான விஷயமாக இருக்கலாம். ஆனால் கிரைம் விஷயங்கள் கலந்த இந்தக் களம் புதியது, வித்தியாசமானது” என்று கூறினார்.

சதிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், ஷான் லோகேஷ் படத்தொகுப்பாளராக இணைந்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பை பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் தமன்னாவுக்கு ஜோடியாக நடித்துள்ள கண்ணே கலைமானே படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon