மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

தமிழகத்தின் அந்நிய முதலீடு சரிவு!

தமிழகத்தின் அந்நிய முதலீடு சரிவு!

நடப்பு நிதியாண்டின் (2018-19) ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேரடி அந்நிய முதலீடு 21 விழுக்காடு சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.10,892 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.13,898 கோடியாக இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 21 விழுக்காடு சரிவு காணப்பட்டுள்ளது.

2016-17ஆம் நிதியாண்டில் ரூ.14,830 கோடி தமிழகத்தில் நேரடி அந்நிய முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது 2017-18ஆம் நிதியாண்டில் 56 விழுக்காடு அதிகரித்து ரூ.22,354 கோடியாக உயர்ந்தது. 2018-19 நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழகத்தைப் போல கர்நாடகாவில் 43.3 விழுக்காடும், மகாராஷ்டிராவில் 42.8 விழுக்காடும் அந்நிய நேரடி முதலீட்டில் சரிவைக் கண்டுள்ளதாக தொழில் துறை ஊக்குவிப்பு & உள் வர்த்தகம் மற்றும் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் 300 விழுக்காடும், குஜராத்தில் 249 விழுக்காடும், டெல்லியில் 70.2 விழுக்காடும் அந்நிய நேரடி முதலீடுகள் உயர்வைக் கண்டுள்ளன. அண்மையில் தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், அடுத்து வரும் ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon