மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கொல்கத்தா ஆணையர் சிபிஐ முன் ஆஜராக உத்தரவு!

கொல்கத்தா ஆணையர் சிபிஐ முன் ஆஜராக உத்தரவு!

கொல்கத்தா ஆணையருக்கு எதிராக சிபிஐ தொடுத்த வழக்கில், காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாரதா நிதி நிறுவன ஊழல் தொடர்பாக விசாரணைக்காக பிப்ரவரி 2ஆம் தேதி மாலை சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்றனர். அவர்களை உள்ளே அனுமதிக்க விடாமல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டம் இன்று (பிப்ரவரி 4) மூன்றாவது நாளாக நீடிக்கிறது.

இதற்கிடையே, சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ மனு தாக்கல் செய்தது. அதில், சாரதா நிதி நிறுவன ஊழல் தொடர்பான லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை கொல்கத்தா காவல்துறை அழித்துள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தது. அதுபோன்று மேற்கு வங்க அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்த சிபிஐயின் நடவடிக்கைக்கு மாநில போலீஸ் எதிர்ப்புத் தெரிவிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதோடு, 2014ஆம் ஆண்டு சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்துள்ளன என சிபிஐ சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்க்வி, மாநில காவல்துறை ஆதாரங்களை அழித்ததாக சிபிஐ குற்றம்சாட்டுகிறது. அவ்வாறெனில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் சிபிஐ என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பினார். அதுபோன்று இவ்விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ”சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்கவேண்டும். மேற்கு வங்கத்தில் அல்லாமல் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் பகுதியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும். அவரைக் கைது செய்யக் கூடாது. அவரை, நிர்பந்தப்படுத்தும் வகையில் சிபிஐ செயல்படக் கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் பிப்ரவரி 18ஆம் தேதி விளக்கமளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் ஆணையரைக் கைது செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon