மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

பிப்.8: காலை பட்ஜெட், மாலை மா.செ.க்கள் கூட்டம்!

பிப்.8: காலை பட்ஜெட், மாலை மா.செ.க்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தயாராகி வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகிக்கும் பணியும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் நேற்று ஆரம்பித்தது. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் உள்பட ஏராளமானோர் விருப்ப மனுக்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 8ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது. கூட்டணி குறித்தும், தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கவுள்ளனர். தேர்தலில் அமைச்சர்கள் தங்களது வாரிசுகளையும், உறவினர்களையும் களமிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon