மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ராணுவத் துறையில் படிகள் நிறுத்தம்!

ராணுவத் துறையில் படிகள் நிறுத்தம்!

நிதி பற்றாக்குறை காரணமாக ராணுவ அதிகாரிகளுக்கான பயணப்படி மற்றும் இதர படிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ராணுவக் கணக்காளர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரிகள் அவசரப் பணிகளுக்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம். ஒரு இடத்தில் ஆறு மாதம் வரை தங்க வேண்டுமானால், அது தற்காலிகப் பணி என அழைக்கப்படும். அப்படிச் செல்லும்போது அவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு, பயணம் போன்றவற்றுக்கான படிகள் வழங்கப்பட வேண்டும். தற்போது, இந்த படிகள் அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுப்பில் செல்வோருக்கான பயணத் தொகை தவிர மற்ற தொகைகள் அளிக்கப்படவில்லை.

முதலில் அதிகாரிகள் தங்கள் பணத்தைச் செலவழித்து விட்டு, பிறகு அதற்கான படியைப் பெற்றுக் கொள்வார்கள். தற்போது படி வழங்கப்படாததனால், தங்களுடைய பணத்தைச் செலவு செய்யத் தயங்குகின்றனர். இதனால், ராணுவ அதிகாரிகளை அவசரப் பணிகளுக்கு அனுப்புவது சிரமமாகியுள்ளது.

நிதி பற்றாக்குறை தற்காலிகமானது. மீண்டும் நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராணுவக் கணக்கு வழக்குகளைப் பராமரிக்கும் அமைப்பான பிசிடிஏவின் முதன்மை அதிகாரி கூறுகையில், "ராணுவ அதிகாரிகளுக்கான நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நிதிநிலை சீராகும் வரை பயணப்படி மற்றும் அகவிலைப்படி வழங்க இயலாது" என்று தெரிவித்தார்.

ஒரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குச் செல்லும் ராணுவ அதிகாரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி செலவாகிறது. தற்போது இருக்கின்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்காக மேலும் 800 கோடி ரூபாய் ஒதுக்கப்படுமென்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 40,000 ராணுவ அதிகாரிகள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon