மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஒரு கப் காபி

ஒரு கப் காபி

ஏன் இந்தத் தடுமாற்றம்?

வாழ்க்கையில் எப்போது புலம்பல்கள் நிரம்பி வழியும்? பெரும்பாலும் இதற்கு ஏதேனும் ஒரு மாற்றம் காரணமாக இருக்கும். நட்பில் அல்லது உறவில் ஏற்படும் மாற்றம், இருவருக்கு இடையிலான தொடர்பில் விலகலை உண்டாக்குகிறது. புதிதாக அறிமுகமான ஒரு நுட்பத்தைக் கைக்கொள்ள இயலாதபோது, இயல்பு வாழ்க்கையில் பிசகு ஏற்படுகிறது.

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மையினால் புதிய இடத்துக்குச் செல்வது, அறிமுகமில்லாத நபரை எதிர்கொள்வது, வேறொரு பணியை மேற்கொள்வது போன்றவற்றை நம்மில் பலர் தவிர்க்கிறோம். காதல், கல்யாணம் போன்றவற்றை எதிர்கொள்ளத் தயங்குவதற்கும், மாற்றத்தை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கும் நிறைய தொடர்பு உண்டு.

ஆனால், மாறாதது இந்த உலகில் எதுவும் இல்லை. இதைப் புரிந்துகொண்டால், எந்த மாற்றமும் நம்மைப் பாதிக்காது. பல விஷயங்களைப் படித்தும், கேட்டும், பார்த்தும் அறிந்தவர்களை விட, எளிமையாக வாழும் பாமரர்கள் பலர் இயல்பு வாழ்க்கையில் மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் வாழ்வை அதன் போக்கில் எதிர்கொண்டு பயணிக்கிறார்கள்.

லட்சம் கோடி ஆண்டுகளாக இந்த பூமிப்பந்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து மறைந்தாலும், பல்வேறு பரிணாம மாற்றங்களோடு மனிதன் என்ற இனம் இங்கு நிலைத்திருப்பதற்கும் இதுவே காரணம். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’, ‘மாற்றத்தைத் தவிர வேறெதுவும் இங்கு நிலையானது இல்லை’, ‘மாற்றத்தைத் தவிர மாறாதது எதுவும் இல்லை’ என்று ஒரே அர்த்தம் தொனிக்கும் பல்வேறு சொற்றொடர்கள் புழக்கத்தில் உள்ளன. இதை முதலில் சொன்னது ஹெரோகிளிடஸ் என்றும், அதை கார்ல் மார்க்ஸ் பிரதிபலித்தார் என்றும் சொல்கின்றனர்.

எனக்கு இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியது மதிதா இந்துக் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றிய பொன்ராஜ். ஆண்டு இறுதியில் கையெழுத்து வாங்குவதற்காக அவரிடம் டயரியை நீட்டியபோது, இதை எழுதிவிட்டுச் சிரித்தார். ‘நீங்கள் நிறைய மாறுவீர்கள்’ என்றார். ‘தோற்றத்திலா’ என்றபோதும் அவர் புன்னகையையே பதிலாகத் தந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், அவர் எழுதியதைப் படித்துப் பார்த்தேன். அவர் எழுதியதன் தடயங்களை என் வாழ்வில் அனுபவித்திருந்தது நினைவுக்கு வந்தது. சிரித்தேன். சிலிர்த்தேன்.

அவரது எழுத்துகூடச் சிறிது மாறியிருந்தது போலத் தெரிந்தது!

- உதய்

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon