மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

கைதான இந்திய மாணவர்கள்: அமெரிக்கா விளக்கம்!

கைதான இந்திய மாணவர்கள்: அமெரிக்கா விளக்கம்!

கைதான இந்திய மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் குற்றத்தில் ஈடுபடுவது குறித்து தெரியும் என்று அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

அமெரிக்காவில் கல்வி பெறுவதற்காக மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர் அங்கு தங்குவதற்கும், அவரவர் கல்வி சார்ந்த துறைகளில் பணிபுரியவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ‘யுனிவெர்சிட்டி ஆஃப் ஃபார்மிங்டன்’ என்ற பெயரில் போலியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600க்கும் மேற்பட்டோர் கல்வி பெறுவதுபோல மோசடி செய்து அவர்களுக்கு விசாவும், பணிக்கான அனுமதியும் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசா மோசடியில் ஈடுபட்டதாக 129 இந்திய மாணவர்கள் உட்பட மொத்தம் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களையும் மீட்கும் நோக்கில் இந்திய அரசு டெல்லியிலிருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 130 மாணவர்களுக்குமே அவர்கள் போலியான பல்கலைக்கழகத்தில்தான் சேர்ந்துள்ளனர் என்பது தெரியும் எனவும், அமெரிக்காவில் தங்குவதற்காக குற்றத்தில் ஈடுபடுவதும் அவர்களுக்கு தெரியும் எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் வகுப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை என்பது கைதான அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக தங்குவதற்கு அவர்கள் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கைதான மாணவர்கள் குறித்த பிரச்சினையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போலி பல்கலைக்கழகத்தை நடத்திய எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியர்களாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களாகவும் உள்ளனர். இந்த போலி பல்கலைக்கழகத்தில் சுமார் 600 பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களாக உள்ளனர். கைது நடவடிக்கையிலிருந்து பலர் தப்பி அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும் சில இந்திய மாணவர்கள் வெளியே செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon