மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 29 நவ 2020

கோயிலில் மது அருந்துவதைக் கண்காணிக்க ஏற்பாடு!

கோயிலில் மது அருந்துவதைக் கண்காணிக்க ஏற்பாடு!

மதுரை கள்ளழகர் கோயில் பகுதிகளில் மது அருந்தப்படுகிறதா என்பதை சிசிடிவி கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். “மதுரையின் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றான கள்ளழகர் கோயிலுக்குச் சொந்தமாக பல மண்டகப்படிகளும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன. இவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. கோயிலின் சொத்துக்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்கவும், அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் வனம் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டது. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று (பிப்ரவரி 5) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, “அழகர் கோயில் பகுதியிலுள்ள விடுதிகள் அசுத்தமாகவும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி வருகிறது. மது அருந்துபவர்களால் கோயிலுக்கு வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“கோயிலுக்குச் சொந்தமான மண்டகப்படிகள் எத்தனை? சொத்துக்கள் எவ்வளவு? அதை யார் நிர்வகித்து வருகிறார்கள்? எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன?, அவற்றை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை கள்ளழகர் கோயில் பகுதிகளில் மது அருந்தத் தடை விதித்தும், அந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்கவும் உத்தரவிட்டனர் நீதிபதிகள். இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon