மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

நகை, பணத்தோடு சிசிடிவியும் கொள்ளை!

நகை, பணத்தோடு சிசிடிவியும் கொள்ளை!

சென்னை அண்ணாநகர் கிழக்குப் பகுதியில் மூன்று இடங்களில் தங்க நகைகள், பணம் ஆகியவற்றுடன் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியிலுள்ள எல் பிளாக்கில் வசித்து வருகிறார் சத்தியநாராயணா. பெரம்பூரில் இவருக்குச் சொந்தமான வாகன ஷோரூம் ஒன்று உள்ளது. கடந்த வாரம், தனது சகோதரரின் நினைவு தினத்தை முன்னிட்டு இவர் ஆந்திரா சென்றார். இவரது வீட்டில் பணியாளாக இருந்து வருகிறார் குப்பம்மா. நேற்று (பிப்ரவரி 4) சத்தியநாராயணா வீட்டின் கதவிலுள்ள பூட்டுகள் உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் குப்பம்மா. இது பற்றி, உடனடியாகச் சத்தியநாராயணாவுக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அண்ணாநகர் கிழக்கு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. சத்தியநாராயணா வீட்டில் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் 100 சவரனுக்கும் அதிகமான நகைகள், 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அது மட்டுமல்லாமல், அவரது வீட்டில் இருந்த விலையுயர்ந்த மதுபானங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சத்தியநாராயணா வீடு அமைந்துள்ள தெருவில், குடிநீர் சுத்திகரிப்புக் கருவி விற்பனை செய்யும் நிறுவனமொன்று இயங்கி வருகிறது. ஞாயிறு விடுமுறை தினமென்பதால், நேற்று இந்நிறுவன ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். அப்போது, அலுவலகக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல, இப்பகுதியைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் வெள்ளி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தடயம் ஏதும் கிடைக்காமல் இருக்கும் வகையில், கொள்ளை நடந்த மூன்று இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி, டிவிஆர் உள்ளிட்ட கருவிகளைத் திருடிச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள். மூன்று இடங்களிலும் ஒரே மாதிரியாகக் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதுடன், சிசிடிவி பதிவுகள் திருடப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் மற்ற வீடுகள், அலுவலகங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கொள்ளையர்களைத் தேடும் பணியைச் செய்து வருகின்றனர் போலீசார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon