மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

மம்தா நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்: கனிமொழி

மம்தா நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்: கனிமொழி

மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் போராட்டத்துக்கு திமுக எம்.பி கனிமொழி நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். மம்தாவின் தர்ணா போராட்டம் நேற்று இரவும் நீடித்தது.

நிதி நிறுவன மோசடி வழக்கில் பிப்ரவரி 2ஆம் தேதி மாலை கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த எட்டு சிபிஐ அதிகாரிகள், அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை மேற்கு வங்கத்தில் திரும்ப பெறப்பட்டிருந்த நிலையில், உரிய அனுமதி இல்லாமல் காவல் ஆணையரிடம் விசாரிக்க வந்ததாகக் கூறி முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாட்களாகத் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் யார் அனுமதியுடன் விசாரணை நடத்த வந்தார்கள், இது முற்றிலும் பிரதமர் மோடி மேற்கு வங்க அரசைப் பழிவாங்கும் நோக்கில் எடுத்து வரும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ளார் மம்தா. அதாவது பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம், ரத யாத்திரை மற்றும் மேற்கு வங்கத்தில் அமித் ஷா, மோடி கூட்டத்துக்குத் தடை விதித்தது ஆகியவற்றுக்கு எதிராக இதுபோன்ற செயலில் மோடி ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கொல்கத்தா சென்று, மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவரது போராட்டத்துக்கு திமுகவின் ஆதரவைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று புரிந்துகொண்டு, மம்தாவுக்கு எதிராகப் பிரதமர் இவ்வாறு நடந்து கொள்கிறார். மாநில அரசுகளின் அதிகாரத்தை ஒடுக்குவதில் மோடி அரசு அக்கறை காட்டுவதாக கனிமொழி புகார் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இப்போது மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ஒன்று திரண்டுள்ளதாகவும், நாட்டின் ஒவ்வோர் அமைப்பையும் சிதைக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் கனிமொழி கேட்டுக் கொண்டார். அதுபோன்று மம்தா பானர்ஜி மீண்டும் ஒருமுறை நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மம்தா பானர்ஜியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

“இது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சிபிஐயைப் பயன்படுத்தும் சதியாகும். மோடி எங்களை விட மூத்தவர். பிரதமர் பதவி வரும், போகும். ஆனால், இந்த நாட்டில் பெரிய நிறுவனங்கள் எப்போதும் நிலைத்து நிற்கும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் சமரசம் செய்துகொள்ளாதவர்கள் சிபிஐ மற்றும் பிற நிறுவனங்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையாவிட்டால், மக்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்” என்றார் தேஜஸ்வி.

இருவருக்கும் நன்றி கூறிய மம்தா பானர்ஜி, பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார். மேலும், “நீங்கள் (பாஜக) திருணாமூல் காங்கிரஸ் தலைவர்களை மோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியபோது நான் போராடவில்லை. ஆனால், காவல்துறை அமைப்புக்குத் தலைமை வகிக்கும் கொல்கத்தா காவல்துறை ஆணையரை அவமானப்படுத்த முயற்சித்தீர்கள். அதனால்தான் எனக்குக் கோபம் வந்தது. போராட்டத்தில் இறங்கினேன். இதற்காக என் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், சமரசம் செய்துகொள்ள மாட்டேன்'' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மம்தா.

இதனிடையே காவல் ஆணையருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon