மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஃபோர்ப்ஸ் பட்டியலில் விஜய் தேவரகொண்டா

ஃபோர்ப்ஸ் பட்டியலில் விஜய் தேவரகொண்டா

ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் பட்டியலில் இடம்பெற்றது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் 30 வயதுக்குள்ளானவர்களுக்கான பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே நடிகர் இவர் மட்டுமே ஆவார். 2011ஆம் ஆண்டில் வெளியான நுவ்விலா என்ற படம் மூலம் விஜய் தேவரகொண்டா அறிமுகமாகி பிரபலமடைந்தார். 2016ஆம் ஆண்டில் வெளியான பெல்லி சூப்புலு படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் மேலும் பிரபலமடைந்தார். எனினும், அவரது அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனதால் தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் விஜய் தேவரகொண்டா பிரபலமானார். இப்படம் தற்போது தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகிக்கொண்டு இருக்கிறது.

இவர் நடித்த கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா ஆகிய படங்களும் பெரும் ஹிட் ஆகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் அதிகளவில் வசூல் குவித்த படங்களில் கீதா கோவிந்தமும் ஒன்றாகும். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றது குறித்து விஜய் தேவரக்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய 25ஆவது வயதில் என்னுடைய ஆந்திரா வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை ரூ.500 இல்லாததால் என்னுடைய கணக்கு முடக்கப்பட்டது. 30 வயதுக்குள் செட்டிலாகிவிட்டால் இளம் வயதிலேயே வெற்றியை கொண்டாடலாம் என்று எனது தந்தை கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஃபோர்ப்ஸ் பட்டியலில் நான்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவர் தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் கம்யூனிச கொள்கைகள் கொண்ட ஒரு மாணவ இயக்க தலைவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon