மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

முதியோர் இல்லங்கள்: அறிக்கை கேட்கும் நீதிமன்றம்!

முதியோர் இல்லங்கள்: அறிக்கை கேட்கும் நீதிமன்றம்!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் முதியோர் இல்லங்களில் சமூக நலத் துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையிலுள்ள தனியார் முதியோர் இல்லத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என கோவையை சேர்ந்த சிவராமன் தொடர்ந்த வழக்கில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் முதியோர் இல்லங்கள் குறித்து சமூக நலத் துறை அறிக்கை அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 5) நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சமூக நலத் துறை செயலாளர் கே.மணிவாசன் ஆஜராகி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், முதியோர் இல்லங்களைப் பராமரிப்பது குறித்த 2016ஆம் ஆண்டு அரசாணையைக் கண்டிப்புடன் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளின் மானியத்தின் மூலம் 144 அரசு முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருவதாகவும், பதிவு செய்யப்பட்ட மற்றும் தனியார் இல்லங்கள் 133 உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த முதியோர் இல்லங்களை மாவட்ட குழுக்கள் நேரில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், பதிவுசெய்யப்படாத இல்லங்களை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசு முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் செலவில் நினோனியா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச மூத்த குடிமக்கள் தினம் மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோரி 2,514 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 1823 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மூத்த குடிமக்களின் குறைகளைக் கேட்பதற்காக 81 தீர்ப்பாயங்கள் அமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், அனைத்து மாவட்டங்களில் உள்ள முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர்களும், கோவையில் உள்ள முதியோர் இல்லங்களைச் சமூக நலத் துறை செயலாளரும் நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon