மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

விசாரணை நீதிமன்றங்களில் தனி பதிவேடு: டிஜிபி யோசனை!

விசாரணை நீதிமன்றங்களில் தனி பதிவேடு: டிஜிபி யோசனை!

குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7,324 காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன், கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் முடித்து வைக்கப்பட்ட எப்ஐஆர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரத்தைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றப் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இது போன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைத்தது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக உள் துறைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், இன்று (பிப்ரவரி 5) தமிழக டிஜிபி சார்பில் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல் ஆணையர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7,324 காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் விவகாரத்தில் உரிய விதிகளை வகுப்பது தொடர்பாக அனைத்து மாநகரக் காவல் ஆணையர்களிடம் இருந்தும், மண்டல ஐஜிக்களிடம் இருந்தும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்குள் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும், விசாரணையைக் கண்காணிப்பதற்கும் உதவி ஆணையர் அல்லது துணைக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலுள்ள அதிகாரிகளை நியமிக்கும்படி அனைத்து மாநகரக் காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில், தமிழகத்தில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 603 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள டிஜிபி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் தேதியைக் குறிப்பிடுவதற்கு என்று விசாரணை நீதிமன்றங்களில் தனி பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார் நீதிபதி எம்.வி.முரளிதரன்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon