மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஈவிகேஸ் ஈரோட்டில் போட்டி: கட்சியினருடன் ஆலோசனை!

ஈவிகேஸ் ஈரோட்டில் போட்டி: கட்சியினருடன் ஆலோசனை!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் மோடி சிபிஐயை ஏவி விடுவதாக தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் ஜனவரி 30ஆம் தேதி திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு இன்று (பிப்ரவரி 5) ஈவிகேஸ் இளங்கோவன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தை வரவேற்பதாகவும், காமராஜர் காலத்திலிருந்து கட்சிக்காகப் பாடுபட்ட கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “சிபிஐயுடைய செயல்பாடு என்பது அத்துமீறிச் சென்றுவிட்டது. மோடி எங்கெல்லாம் சொல்கின்றாரோ அங்கெல்லாம் போய் சிபிஐ ரைய்டு நடத்துகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் மோடி சிபிஐயை ஏவ விட்டிருக்கிறார். அதைத்தடுக்க வேண்டுமென்பதற்காக மம்தா பானர்ஜி தர்ணா நடத்துகிறார். இதை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரிக்கும்” என்றார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி ஈவிகேஸ்.இளங்கோவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். கடந்த 2 நாட்களாக ஈவிகேஸ் இளங்கோவன் அவரது ஈரோடு இல்லத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் வட்டார நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பு இன்றும் தொடர்ந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஈரோடு தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கு விரும்புவதாகவும், அதுகுறித்துதான் இந்த தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

ஆனால் மதிமுகவின் மாநில நிர்வாகி கணேசமூர்த்தி ஈரோட்டில் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈவிகேஸ்.இளங்கோவனை 49,336 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார். அப்போது மதிமுக சார்பில் வென்ற ஒரே நபர் இவர் மட்டும்தான். அதேபோல 2014ஆம் ஆண்டிலும் கணேசமூர்த்தி 2ஆவது இடத்தைப் பெற்றிருந்தார். இம்முறையும் அவரை வேட்பாளராக நிறுத்த மதிமுக முயற்சிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியும் இம்முறை திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. ஈரோட்டில் கணிசமான வாக்கு வங்கியை அக்கட்சி வைத்திருப்பதால் அவர்களும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடும்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தனது செல்வாக்கை காட்டும்விதமாக பிப்ரவரி 3ஆம் தேதி நாமக்கல்லில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியுள்ளது. ஆனாலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியே. எனவே ஈரோடு தொகுதி ஏற்கெனவே வெற்றிபெற்ற மதிமுகவுக்கா அல்லது காங்கிரஸ் கட்சிக்கா அல்லது திமுகவே நேரடியாகப் போட்டியிடுமா எனப் பலமுனை கேள்விகள் எழுந்துள்ளன.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon