மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கார்த்தியுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி!

கார்த்தியுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி!

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு கார்த்தியுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்து வெளிவர இருக்கும் தேவ் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இப்படத்தை புதுமுக இயக்குநரான ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் லக்‌ஷ்மன் இப்படத்தை தயாரிக்கிறார். ரொமான்டிக் காமெடி கதைநடை கொண்ட இப்படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசும்போது, லக்‌ஷ்மனுடனான தனது இளம்வயது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

கார்த்தி பேசுகையில், “லக்‌ஷ்மனை என்னுடைய கிளாஸ்மேட் என்று அழைக்க வேண்டுமென்றால் அவர் தலையில் டை அடித்துக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினேன். நாங்கள் இருவருமே மிடில் கிளாஸ் வளர்ப்புகள். பணத்தை எப்படி சேமிக்க வேண்டும், நிர்வகிக்க வேண்டும் என்பதை அவரது தாயிடம் நான் கற்றுக்கொண்டேன், ஒன்றாக படித்தோம், ஒன்றாக சுற்றியிருக்கிறோம், ஒன்றாக சாப்பிட்டு இருக்கிறோம், இப்போதுதான் முதல்முறையாக ஒன்றாக பணிபுரிகிறோம். இந்தப் படம் வெற்றியடையும் என நான் நம்புகிறேன்” என்று பேசினார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பேசுகையில், “இப்படத்தில் நான் நடித்த மேக்னா என்ற கதாப்பாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்த, சுதந்திரமான பெண் கதாப்பாத்திரமாக இருக்கும். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தியுடன் நடிப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். இமய மலை மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon