மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

பஞ்சாமிர்தத்துக்குப் புவிசார் குறியீடு: உயர் நீதிமன்றம் கேள்வி!

பஞ்சாமிர்தத்துக்குப் புவிசார் குறியீடு: உயர் நீதிமன்றம் கேள்வி!

பழனி பஞ்சாமிர்தத்துக்குப் புவிசார் குறியீடு பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பழனி முருகன் கோயிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். “பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், பேருந்து நிலையம் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பழமை வாய்ந்த பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கவும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இன்று (பிப்ரவரி 5) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, “பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, பழனி கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன” என்று கேள்விகள் எழுப்பினர் நீதிபதிகள். இது குறித்து இந்து அறநிலையத் துறை ஆணையர், பழனி முருகன் கோயில் இணை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon