மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

திருட்டு விசிடி ஒழிப்பு எப்போது? விஷால் விளக்கம்!

திருட்டு விசிடி ஒழிப்பு எப்போது? விஷால் விளக்கம்!

மத்திய, மாநில அரசுகள் நினைத்தால்தான் திருட்டு விசிடி ஒழியும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் தமிழக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஷால் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறை மற்றும் தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜாவையும், ஏ.ஆர்.ரகுமானையும் ஒரே மேடையில் பார்க்க முடிந்தது. பார்த்திபனால் தான் இது சாத்தியமானது. இளையராஜா பாட, ரகுமான் இசையமைக்க இதுபோல ஒரு நிகழ்வை வேறெங்கும் பார்க்க முடியாது. ஏன், கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் கூட இது நடக்காது.

எனினும், தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் ரகுமானும், இளையராஜாவும் ஒரே மேடையில் தோன்றினால் நன்றாக இருக்கும் என்பதற்காக பார்த்திபன் செய்த முயற்சியே இது. விழாவிற்கு பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்தோம். ஆனாலும் பல நடிகர்களும், நடிகைகளும் வரவில்லை” என்று கூறினார். நேற்று (பிப்ரவரி 4) நடைபெற்ற ‘பொதுநலன் கருதி’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிப்போம் என்று கூறி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு விஷால் வந்தார். இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்?” என்று கேள்வியெழுப்பினார்.

இதுபற்றி விஷால் பதிலளிக்கையில், “நான் கைகாட்டுவது தமிழக அரசைதான். தமிழக அரசை கடவுள் போல நம்புகிறோம். மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் சட்டவிரோத இணையதளங்களை உடனடியாக முடக்கிவிட முடியும். தமிழக அரசு நினைத்தால் திருட்டு விசிடியை ஒழித்துவிட முடியும்” என்று தெரிவித்தார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon