மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

உயர் நீதிமன்ற வளாகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது!

உயர் நீதிமன்ற வளாகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, சிபிஐ என போலியாக காரில் வலம் வந்த நபரை வழக்கறிஞர்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிபிஐ என ஸ்டிக்கர் ஒட்டிய கருப்பு நிற ஆடி கார் ஒன்று மிக வேகமாக நுழைந்து வழக்கறிஞர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து காரை வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து அந்த நபரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த நபரிடம் பிரதமர் அலுவலகம் பெயரில் போலி அடையாள அட்டை இருந்துள்ளது. அது பற்றி கேட்டதற்கு, பிரதமரின் ப்ரோட்டோக்கால் பாதுகாப்பு அதிகாரி என்று கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த வழக்கறிஞர்கள் தொடர்ந்து அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது தன்னை சிபிஐ அதிகாரி என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபர் போலியாக சிபிஐ அதிகாரி என கூறியது தெரிந்தது.

முதலில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, பின்னர் உதவி ஆணையர், சிபிஐ என அடுக்கடுக்காக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து அதற்குப் போலியான அட்டைகளையும் காண்பித்துள்ளார். பிரதமர் அலுவலக பெயரில் வைத்திருந்த அந்தப் போலி அட்டையில் அவரது பெயர் பிரசாத் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் அவருடைய காரில் நாடாளுமன்ற ஸ்டிக்கர், சிபிஐ ஸ்டிக்கர், இண்டர்போல் ஸ்டிக்கர், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டிக்கர் என பல ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்பிளனேடு.காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த நபரைக் கைது செய்து, அவருடைய சிபிஐ ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon