மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

பன்னீர் செய்வது குடும்ப ஆதிக்கம் இல்லையா? தினகரன்

பன்னீர் செய்வது குடும்ப ஆதிக்கம் இல்லையா? தினகரன்

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் விருப்ப மனு வாங்கியுள்ளது குறித்து தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் துவங்கி வைத்தனர்.

நேற்று ஒரே நாளில் 250 பேர் வரை விருப்ப மனு வாங்கிச் சென்றனர். இவர்களில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத்தும் விருப்ப மனு வாங்கிச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் விருப்ப மனு வாங்கிச் சென்றுள்ளார். இந்த நிலையில் இதனை அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்களின் கூட்டம் திருச்சியில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தினகரன் கலந்துகொண்டு, மக்களவைத் தேர்தலின்போது தொழில்நுட்பப் பிரிவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து அதிமுகவை காப்பாற்றத்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தேன் என்று பன்னீர்செல்வம் கூறுவார். அவருக்கு ஒரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயமா? ஆக பன்னீர்செல்வத்தின் நியாயத்தை மக்கள் பார்த்துக் கொள்வர். தேனி மக்களவைத் தொகுதி பொதுமக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பர். தனது மகன் விருப்ப மனு வாங்கியுள்ளது குடும்ப ஆதிக்கம் இல்லை என்று அவர் கூறினால் மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை அதிமுகவிலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறி 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் ஆரம்பித்தார். சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்கிய பிறகு, 2017 ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிமுகவின் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தன. பன்னீர்செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon