மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கலை யார் பக்கம் நிற்க வேண்டும்: ரஞ்சித் பதில்!

கலை யார் பக்கம் நிற்க வேண்டும்: ரஞ்சித் பதில்!

இளைஞர்களின் கலைக் கண்காட்சி: ஒரு பார்வை - 5

மதரா

சென்னை கவின் கலைக்கல்லூரியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடத்தும் கலைக்கண்காட்சி கலை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. இதனால் கண்காட்சி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று இயக்குநர் பா.இரஞ்சித் குடும்பத்துடன் வருகை தந்து கலைப் படைப்புகளை பார்த்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ரஞ்சித் கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதால் உரிமையுடன் தனது தம்பி, தங்கைகளுக்கு வழங்கும் அறிவுரையாகவே அவரது பேச்சு அமைந்திருந்தது.

“பல்வேறு தலைப்புகளில் நுட்பமாக படைப்புகளை உருவாக்கியுள்ளீர்கள். அமைதியான சூழலில் இவற்றைப் பார்ப்பது நல்ல அனுபவம். சென்னையில் நான் பார்த்த பல்வேறு கண்காட்சிகளில் இது முக்கியமான கண்காட்சி” என்று தன் பேச்சைத் தொடங்கினார்.

“சக மனிதரைக் கவனிப்பதும், புத்தகங்கள் படிப்பதும், பயணங்கள் மேற்கொள்வதும் கலைஞர்கள் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும்” என சில அறிவுரைகளைக் கூறிய அவர் சக மனிதர்களைக் கவனிப்பது எவ்வாறு படைப்பில் பிரதிபலிக்கிறது என்பதைத் தனது அனுபவத்தில் இருந்து உதாரணம் கொடுத்தார்.

“மெட்ராஸ் படத்தில் வரும் ஜானி கதாபாத்திரம் என்பது நான் சந்தித்த ஒரு நபரின் பிரதிபலிப்பு தான். கல்லூரியின் அருகிலேயே அவர் இருப்பார். உரிமையுடன் என்னிடம் வந்து எப்போதாவது பத்து ரூபாய் கேட்பார். என்னிடம் மொத்தமும் அவ்வளவு தான் இருக்கும். கொடுப்பேன். நீண்ட நாள்களாக ஒரு பைபிள் வேண்டும் என்று கேட்டார். அதை வாங்கிக்கொடுக்க முடியாமல் என் மனைவி அனிதாவின் பைபிளை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆங்கில செய்திதாள்கள் கூட வாசிப்பார். அவர் தான் ஜானி கதாபாத்திரமாக என் படைப்பில் உருவானார். அதனால் நம்மைச் சுற்றியிருப்பவற்றை உற்றுக் கவனிக்க வேண்டும்.

என் சிந்தனையில் அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர், திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஓவியர் சந்ரு சார் தான். கலையை மக்களைப் புரிந்துகொள்வது பற்றிப் பல திறப்புகளை அவர் எனக்குள் ஏற்படுத்தினார்.

உங்கள் தேடல் குறித்தும் நினைவுகள் குறித்தும் பல படைப்புகளை உருவாக்கியுள்ளீர்கள். கண்முன் நடைபெறும் சமூக அவலங்களையும் கலைக்குள் கொண்டுவரவேண்டும். நான் அதையே எனது படைப்புகளில் செய்கிறேன். உங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என வற்புறுத்தவில்லை. செய்தால் நன்றாக இருக்கும் என்ற என் விருப்பத்தை முன்வைக்கிறேன்” என்று கூறினார்.

கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்பது தொடர்ந்து இருந்து வரும் விவாதம். ரஞ்சித் தனது பார்வையைப் பின்வருமாறு விளக்கினார். “மேற்குலக நாடுகளில் கலை கலைக்காக இயங்கலாம். ஏனெனில் அங்கு தங்கள் வாழ்வாதாரத்திற்கான பெரிய போராட்டமோ, பெரிய அளவிலான ஏற்றத் தாழ்வுக் கொடுமைகளோ இல்லை. அவர்கள் கலை கலைக்காகவே என்று இயங்குவதில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் மிகுந்த நெருக்கடிக்குள் இருக்கிறார்கள். சாதியக் கொடுமைகள் உச்சத்தில் உள்ளன. இங்குக் கலைஞன் மக்களுக்காக நிற்கவேண்டிய தேவை உள்ளது” என்று அழுத்தமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

சாதியப் பாகுபாடுகள், சாதியக் கொடுமைகள் பற்றி ரஞ்சித் தொடர்ந்து பேசிவருகிறார். சாதிய மனப்பான்மை என்பது வன்முறை, கொலை, ஆகியவற்றில் மட்டுமல்ல சாதாரணமாக நமது செயலில் எப்படி வெளிப்படுகிறது, அதனால் வரலாற்றில் நாம் இழந்தவை எவை, கலைஞர்கள் மத்தியில் இது என்ன மாதிரியான தோற்றத்தில் செயல்படுகிறது என்பதை பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காட்டி அவர் விளக்கினார்.

“இங்கு ஒவ்வொரு கலையும் தனித் தனியே நிற்கின்றன. எழுத்தாளர்களுடன் ஓவியர்களுக்குத் தொடர்பில்லை. ஓவியர்களுடன் நாடகக் கலைஞர்களுக்கு தொடர்பில்லை, சினிமா ஒரு பக்கம் தனியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. படைப்பாளிகள் அனைவரும் சேர்ந்து இயங்குவதற்கான வெளி இங்கு இல்லை. ஒருவர் மற்றொருவரின் படைப்பை அங்கீகரித்தல், கொண்டாடுதல் ஆகியவை இங்கு நடைபெறுவதே இல்லை. ஏனெனில் நாம் சாதிய சமூகமாக இருக்கிறோம். ஒவ்வொரு துறையும் தனித் தனி தீவாக இயங்குகிறது.

இது ஆண்டாண்டு காலமாக நடந்துவருகிறது. இங்கு அறிவியல், மருத்துவம், வானியல் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர். ஒவ்வொரு சித்தரும் ஒரு ஆய்வாளராக இருந்துள்ளனர். ஆனால் அடுத்த தலைமுறைக்கு அவர்களது அறிவு கடத்தப்படவில்லை. இதுவே தமிழ்ச் சமூகத்திற்கான பின்னடைவுக்கு முக்கிய காரணம்.

நமது உடலிலேயே தீண்டாமையை கடைப்பிடிக்கிறோம். ஒரு கையை சோத்துக் கை எனவும் ஒரு கையை பீச்சாங்கை எனவும் ஒதுக்குகிறோம். அந்த கையால் வாங்குவதைக் கொடுப்பதை மரியாதைக் குறைவாகவே கருதுகிறோம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. கலை மூலம் தான் அந்தச் சமூக அவலங்களை மாற்ற முடியும். சமூக முன்னேற்றத்திற்கான கருவியாகவே நான் கலையைப் பார்க்கிறேன்.

இறுதியாகக் கலையின் வளர்ச்சியில் அரசின் பங்களிப்பு தேவை என்பதைக் கூறி உரையாடலை நிறைவு செய்தார். “கேரள அரசு கலைக்காக பல முன்னெடுப்புகளை எடுக்கிறது. தமிழக அரசு கலைக்கான ஒரு அமைச்சகத்தை உருவாக்கி கலையையும் கலைஞர்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும்” என்றார்.

அவரது வருகையும் வார்த்தைகளும் அந்த இளம் கலைஞர்களின் முகத்தில் பெரும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததைக் கண்கூடாக பார்க்க முடிந்தது.

இயற்கையை முந்த கலைஞனால் முடியுமா?

பெண் என்றால் பூ மட்டும் தானா?

நினைவுகளைக் கலையாக்கும் கலைஞர்!

சமூகக் கொடுமைகளுக்குக் கலைஞனின் எதிர்வினை!

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon