மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஆசிரியர்கள் போராட்டம்: விவரங்கள் சேகரிப்பு!

ஆசிரியர்கள் போராட்டம்: விவரங்கள் சேகரிப்பு!

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழகப் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

ஊதிய முரண்பாடுகள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்களை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்பது நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு வரவழைப்பதற்காகப் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து, ஒன்பதாவது நாளன்று போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5,500 அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது இடம் மாறுதல், பணியிடை நீக்கம் என துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு நிர்வாகிகள் நேற்று (பிப்ரவரி 4) அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர், எத்தனை நாட்கள் பணிக்கு வரவில்லை என்பது உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், உடனடியாக விவரங்கள் கேட்கப்படுவது எதற்காக என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon