மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

முடிவுக்கு வந்தது மம்தா போராட்டம்!

முடிவுக்கு வந்தது மம்தா போராட்டம்!

மூன்று நாட்களாக தர்ணாவில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிப்ரவரி 5 மாலை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சந்திப்புக்குப் பின் போராட்டத்தைக் கைவிட்டிருக்கிறார் மம்தா.

மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக மேற்கு வங்க முதல்வர் இரவு பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக எம்.பி. கனிமொழி உட்பட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கொல்கத்தா சென்று மம்தாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஷில்லாங் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, அவரை கைது செய்யக்கூடாது என்றும் தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற மம்தா, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 3 மணியளவில் கொல்கத்தா சென்றார். தர்ணாவில் ஈடுபட்டிருந்த மம்தாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு பாஜக அரசைத் தாக்கி பேசினார். சந்திரபாபு நாயுடு, மம்தாவை சந்தித்து பேசியுள்ள நிலையில் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

இதனிடையே மேற்குவங்க மாநிலம் புருலியாவில் இன்று நடக்கும் பாஜக கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுள்ளார். அவரது ஹெலிகாப்டர் புருலியாவில் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துவிட்ட நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ வரை ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து காரில் புருலியா சென்றுள்ளார் ஆதித்யநாத். அங்குப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”முதல்வர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதைவிட ஜனநாயகத்தை வெட்ககேடுக்கு உள்ளாக்கும் விஷயம் வேறும் ஒன்றும் இல்லை” என்று அவர் கூறினார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon