மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கற்பனை உலகிலிருந்து வெளியேறிய தமிழ் சினிமா - தேவிபாரதி

கற்பனை உலகிலிருந்து வெளியேறிய தமிழ் சினிமா - தேவிபாரதி

சினிமா பாரடைசோ - பகுதி-14

தேவராஜ் மோகன் இயக்கத்தில் சிவகுமார் - சுஜாதா நடித்த அன்னக்கிளி திரைப்படம் அதுவரை தமிழ்த் திரையுலகம் காட்டாத அசல் கிராமத்தைப் படம் பிடித்தது. வலுவான திரைக்கதையாலும் தமிழகக் கிராமங்களின் ஆன்மாவை மீட்டும் இசை, பாடல்களாலும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட அந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் மாறிக்கொண்டிருந்ததற்கான தொடக்கம் எனச் சொல்லலாம். அந்தப் படத்தில்தான் இளையராஜா என்னும் மகத்தான திரையிசைக் கலைஞர் அறிமுகமானார். நடிகர் சிவகுமாரின் திரை வாழ்வின் மறக்க முடியாத படங்களில் ஒன்று அன்னக்கிளி.

தமிழகத்தின் இசை மரபுகளை, கிராமியக் கலை வடிவங்களை இந்தப் படத்தின் இசை மீட்டெடுத்தது. அப்போது கோலோச்சிக்கொண்டிருந்த நாயகர்களின் அடையாளம் இல்லாமல் தமிழ் வாழ்வை நெருங்க முயன்ற அன்னக்கிளியின் தாக்கம் அதற்குப் பிறகு நெடுங்காலம் நீடித்திருந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த குயிலே, கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய், மனதுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா எனத் தொடங்கும் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களில் ஒன்று.

அதே சாயலில் 16 வயதினிலே திரைப்படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். அன்னக்கிளியில் தன் மன்னன் யாரென சுஜாதா குயிலைக் கேட்டது போல் 16 வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே செந்தூரப் பூவே எனத் தொடங்கும் ஒரு பாடல் மூலம் ஸ்ரீதேவி தன் மன்னன் யாரென செந்தூரப் பூவிடம் கேட்பார். அந்தக் கட்டத்தில் வந்த வேறு சில படங்களிலும்கூட நாயகிகள் பூப்பெய்தியவுடன் தன் மன்னனைத் தேடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன.

அன்னக்கிளியைப் போலவே ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படமும் தமிழகக் கிராமப்புற வாழ்வைச் சித்திரித்துப் பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் பாடல்களும் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் இடையறாது ஒலித்துக்கொண்டிருந்தன. அந்தப் படத்திலும் சிவகுமார்தான் நாயகன். நாயகி ஸ்ரீப்ரியா. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு தமிழகக் கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடு மாடுகளையும் கோழிகளையும் மற்ற வளர்ப்புப் பிராணிகளையும் திரைப்படங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியும் என்ற பட்டறிவு வந்திருக்க வேண்டும்.

16 வயதினிலே திரைப்படத்தில்கூடக் கோழியொன்று ஒரு காட்சியின் முக்கியப் பாத்திரமாக இடம்பெற்றிருக்கும். பாரதிராஜாவின் படங்களில் கிராம வாழ்வுக்கான அடையாளமாக ஆடு, மாடுகளுடனும் கோழிகளுடனும் நாரைகள் அதிக அளவில் இடம்பெற்றன. மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற நவீனத் தமிழ் சினிமா இயக்குநர்களின் படங்களிலும் அவை அதிகம் தென்பட்டன. ஆனால், அவர்களுக்குப் பிறகு வந்த ராமநாராயணன் வளர்ப்புப் பிராணிகளை படத்தின் முதன்மைப் பாத்திரங்களாக உருமாற்றி அவற்றுக்கு நாயக அந்தஸ்துப் பெற்றுத் தந்தார்.

அவரது படங்களில் ஆடு, மாடு, கோழிகளைத் தவிர குரங்குகளுக்கும் முக்கிய இடம் அளிக்கப்பட்டது. வருடத்துக்கு பத்துப் பன்னிரண்டு படங்கள் வரை இயக்கிய ராமநாராயணன் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநராகச் சில ஆண்டுகள் வரை வலம் வந்தார். ஆடு, மாடு, கோழி, குரங்குகளை வைத்துப் படம் தயாரித்தவர், விஜய்காந்த் - சந்திரசேகர் கூட்டணியை வைத்து சிவப்பு மல்லி என்ற புரட்சிப் படம் ஒன்றையும் இயக்கினார். அந்தப் படம் வணிக ரீதியில் வெற்றிபெற்றதோடு நில்லாமல் ராமநாராயணனுக்கும் விஜய்காந்துக்கும் சந்திரசேகருக்கும் அரசியல் அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. கிடைத்த பெயரைக் கொண்டு மூன்று பேருமே அரசியல் களத்தில் குதித்தார்கள்.

ராமநாராயணனும் சந்திரசேகரும் திமுகவில் சேர்ந்து எம்.எல்.ஏ.க்களாகச் சிறிது காலம் இருந்தார்கள். இருவருக்குமே திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் என்ற அந்தஸ்துக் கிடைத்தது. திமுக ஆட்சியின்போது ராமநாராயணன் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தன் பதவிக் காலத்தில் நடிகர், நடிகைகள் பலருக்குக் கலைமாமணிப் பட்டங்களை வழங்கிக் கௌரவித்து தமிழ் சினிமாவுக்குத் தான்பட்ட நன்றிக் கடனைத் தீர்த்துக்கொண்டார் ராமநாராயணன். சிவப்பு மல்லி படத்தில் புரட்சியாளராக நடித்த விஜய்காந்த் அதற்குப் பிறகு தொடர்ந்து சில படங்களில் புரட்சியாளராக நடித்தார். வேறு சில படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்து சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றினார், கிராமப்புறக் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வாய்த்தபோது பஞ்சாயத்துத் தலைவராக அவதாரமெடுத்து நீதியை நிலைநாட்டினார் விஜய்காந்த். பல தியாகங்களைச் செய்தார். புரட்சிக் கலைஞர் என்ற பட்டம் அவரைத் தேடி வந்தது. அந்தப் பட்டத்தைப் பெற்றுத் தந்த படம் சிவப்பு மல்லி.

அந்தப் படத்தின் தாக்கம் வெவ்வேறு வடிவங்களில் சில வருடங்கள் வரை நீடித்திருந்தது.

அந்தப் படத்தின் நாயகர்கள் இருவரும் பொதுவுடமையாளர்கள். படத்தின் ஒரு பாடல் காட்சியில் அரிவாள், சுத்தியலுடன் கூடிய செங்கொடியைப் பிடித்துக்கொண்டு பேரணியாகச் செல்வார்கள். படத்தைப் பார்த்த கம்யூனிஸ்ட் கட்சியினர் புரட்சிக்கான காலம் கணிந்துவிட்டதாகக் கருதி அந்தப் படத்தைக் கொண்டாடத் தொடங்கினார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளின் எளிய அலுவலகங்களில் சிவப்பு மல்லி படத்தின் சுவரொட்டிகளை ஒட்டிவைத்துக் கொண்டார்கள். அவர்களின் கலை, இலக்கிய அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் படத்தைப் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. வார, மாத இதழ்கள் சிலவற்றில் இடம்பெற்ற ராமநாராயணனது சில நேர்காணல்களில் பொதுவுடைமைக் கொள்கை பற்றியும் புரட்சி பற்றியும் சில கேள்விகளும் கேட்கப்பட்டன.

காலம் கனிந்துவிட்டபடியால் தமிழ்த் திரையுலகில் இருந்த இடதுசாரி ஆதரவாளர்கள் இடதுசாரிக் கருத்தியல்களை நேரடியாகத் திரைப்படங்களில் இடம்பெறுவதற்கான வழிவகைகளைப் பற்றி யோசித்தார்கள். முற்போக்கு வட்டாரங்களில் முற்போக்கான திரைப்படங்களைப் பற்றிய முற்போக்கான விமர்சனங்கள் உருவாகத் தொடங்கின. சமூக அக்கறை, சமூக மாற்றம், மக்களுக்கான கலை என்பன போன்ற சொல்லாடல்கள் தமிழ்த் திரைப்பட விமர்சனங்களில் இடம்பெறத் தொடங்கின.

இடதுசாரி நாவலாசிரியர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவலையும் டி.செல்வராஜின் தேநீர் நாவலையும் படமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கேரளத்தில் ஜனசக்தி என்னும் பெயரில் இயங்கிக்கொண்டிருந்த திரைப்படத் தயாரிப்புக் கூட்டமைப்பைப் போல் தமிழகத்திலும் முற்போக்கான திரைப்படங்களுக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றிய யோசனைகள் உருவாகிக்கொண்டிருந்தன. தெலுங்கில் மாதள ரங்கராவ் என்னும் இயக்குநர் கவனம் பெற்றிருந்தார். தீவிரமான இடதுசாரிக் கருத்தியல்களைத் தன் படங்களில் இடம்பெறச் செய்த மாதள ரங்கராவின் இயக்கத்தில் தமிழில் ஒரு புரட்சிகரத் திரைப்படமொன்றை உருவாக்க முடிவு செய்த இடதுசாரி ஆதரவுத் திரைப்படத் துறையினர் துணிந்து அதைச் செயல்படுத்தினர்.

உடனடியாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படத் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கினர். சங்கநாதம் என்னும் புரட்சிகரமான தலைப்பில் படம் பற்றிய அறிவிப்புகள் வந்தன.

அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஈரோட்டில் படமாக்கப்பட்டன. ராஜேஷ், ஒய்.விஜயா போன்ற கலைஞர்கள் நடித்த அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. தாகம், ஊமை சனங்கள் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. டி.செல்வராஜின் நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் அப்போதைய முன்னணி நாயகர்களில் ஒருவராகவும் நம்பிக்கையூட்டும் இயக்குநராகவும் உருவெடுத்துக்கொண்டிருந்த கே.பாக்யராஜ்தான் படத்தின் நாயகன். படம் தொடங்கப்பட்டபோது அவர் பாரதிராஜாவின் இணை இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார். பாரதிராஜாவின் ஒரு திரைப்படத்தில் நாயகன். தேநீர் படத்தின் தயாரிப்புப் பணிகள் தாமதமாகிக்கொண்டே போயின. அதற்குள் பாக்யராஜ் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவராகவும் நாயகராகவும் வளர்ந்திருந்தார். தேநீர்ப் படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளில் காணப்பட்ட பாக்யராஜின் உருவம் அடையாளமே தெரியாத அளவுக்கு இருந்தது. படத்தின் தலைப்பை சாசனம் என மாற்றியதாக நினைவு. இரண்டு படங்களும் தோல்வியடைந்தன.

சங்கநாதம் படத்தின் தயாரிப்பில் பங்கெடுத்த ஈரோட்டைச் சேர்ந்த தோழர் ஒருவர் தனிப்பட்ட முறையில் படத் தயாரிப்பில் ஈடுபட்டார். சங்கநாதம் படத்தில் நடித்த ராஜேஷ், நடிகை லட்சுமி, நாசர் ஆகியோரது நடிப்பில் கடற்கரை தாகம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்தார். முழுக்க வணிக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அந்தப் படம் வணிக ரீதியில் பெரும் தோல்வியடைந்தது.

புரட்சிகர நோக்கங்களுடன் நேரடியாக உருவாக்கப்பட்ட சில படங்கள் தோல்வியடைந்தபோதிலும் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முற்போக்குச் சிந்தனைகளுக்கான இடம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. 1970களின் தொடக்கத்தில் வெளிவந்த வணிக மதிப்பீடு கொண்ட சில திரைப்படங்கள் முற்போக்குக் கருத்தியல்களால் ஊக்கம் பெற்றவையாக இருந்தன.

எஸ்பி.முத்துராமன்கூட, முத்துராமனை நாயகனாக வைத்து அவளும் பெண்தானே என்னும் ஒரு திரைப்படத்தை எடுத்தார். முற்போக்காளர்கள் அதை ஒரு புரட்சிகரமான படமாகக் கொண்டாடினார்கள். அதற்கான நியாயம் அந்தப் படத்தில் இருந்தது. அதேபோல் துரை இயக்கிய ஒரு திரைப்படம் பசி. பாடல்களே இல்லாத அந்தப் படத்தின் நாயகி ஷோபாவுக்கு அந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான ஊர்வசி பட்டம் கிடைத்தது.

1970களுக்கு முன்புவரை வாழ்விலிருந்து வெகுதூரம் விலகிக் கற்பனையில் சஞ்சரித்துக்கொண்டிருந்த தமிழ் சினிமா எதார்த்தத்தில் காலூன்றத் தொடங்கியதைத்தான் உண்மையான மாற்றம் என்று சொல்ல முடியும்.

வெளிப்புறப் படப்பிடிப்புகள் தந்த பரவசம்

புதன், 6 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon