மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

மண்டல் கமிஷன் நாயகனுக்கு சமூகநீதி விருது!

மண்டல் கமிஷன் நாயகனுக்கு  சமூகநீதி  விருது!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மையம், ஒவ்வோர் ஆண்டும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது.

1996ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018ஆம் ஆண்டுக்கான விருது வரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் அரசமைப்புச் சட்டமன்றத்தில் (Constitution Club) உள்ள துணை சபாநாயகர் அரங்கில் 2018ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2018ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி 5ஆம் தேதி மாலை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், கர்நாடக மாநில அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பேராசிரியர் ரவிவர்ம குமார் தலைமை வகித்தார். இவர் இவ்விருதினை 2009ஆம் ஆண்டில் பெற்றவர்.

பி.எஸ்.கிருஷ்ணனுக்குப் பெரியார் பன்னாட்டு மையத்தின் விருதுக் குழுவின் சார்பாக டாக்டர் சோம.இளங்கோவன் வழங்கினார். விருது மடலையும், விருதுத் தொகையான ரூ.1 லட்சத்துக்கான வங்கி வரைவோலையும் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டபோது பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் இருவருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது மகளும் உடன் இருந்தார். விருது வழங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

வீரமணி தனது உரையில், “சமூகநீதிக்கான விருதினை பெரியார் பன்னாட்டு மையம், என்னுடைய பெயரில் விருது நிறுவிய நேரத்தில், நான் எனது பெயரில் விருது அமையப் பெறுவது வேண்டாம்; சமூகநீதிக்காக களம் அமைத்து 95 ஆண்டுக்காலம் போராடிய தந்தை பெரியாரது பெயரில்தான் விருது அமையப் பெற வேண்டும் என அழுத்தமாக எடுத்துக் கூறினேன்.

தந்தை பெரியார் போற்றி காத்து வந்த சமூகநீதிச் சுடரை, அவர்தம் கொள்கையினை, அவரது காலத்துக்குப் பின் யார் எடுத்துச் செல்லுகிறார்கள் என்பதை உலகினர் அறிந்து கொள்வதன் பேரில் ஓர் அடையாளமாக எனது பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் டாக்டர் இலக்குவன்தமிழ் ஆகியோர் கூறினர். விருது பெயரில் தந்தை பெரியாரும், அவர் ஏற்றிப் பாதுகாத்திட்ட சமூகநீதிக் கொள்கையும் உள்ளடக்கம் என விளக்கமளித்தனர்” என்று குறிப்பிட்டவர் இந்த விருதினை கிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு வழங்க காரணம் என்ன என்பதையும் விளக்கினார்.

“1970களில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணியினை மண்டல் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கியது. நாடெங்கும் பயணம் செய்து குழுவின் தலைவர் மண்டலும், குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்தறிந்து, உண்மை நிலைபற்றி ஆய்வு செய்து 1980ஆம் ஆண்டில் அறிக்கையை அளித்தனர். அரசிடம் அளிக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையினைப் பிரசுரிக்க, பலவிதமான தடைகளை அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகளில் உயர்சாதியினர் ஏற்படுத்தினர். பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது. 1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபோதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த சமயம் அதிகார நிலையில் அரசின் செயலாளராக இருந்து நிலவிவந்த நடைமுறைக்கான தடைகளைக் களைந்து பரிந்துரைக்கு ஆதரவாக இருந்து சமூகநீதிக் கொள்கை பற்றிய புரிதலுடன், அவசியம் கருதி உறுதுணையாக இருந்தார் பி.எஸ்.கிருஷ்ணன். பி.எஸ்.கிருஷ்ணனின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக இருந்தார் - பணி நிறைவு பெற்ற நிலையிலும் சமூகநீதிப் பணிகளில் அக்கறைகாட்டிப் பாடுபட்டு வருபவர் பி.எஸ்.கிருஷ்ணன்” என்ற கி.வீரமணி,

“தற்போது மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள உயர்சாதியினரில் ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு பற்றிய கருத்தினையும் கூறி, இடஒதுக்கீட்டுக் கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கான கோட்பாடு; உயர்சாதியினருக்கானது அல்ல என்று குரல் கொடுத்து வருகிறார். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டுவரும் பி.எஸ்.கிருஷ்ணன் முற்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். அப்படிப்பட்டவரின் ஓய்வு என்பது தனது அரசுப் பணிக்குத்தான், தான் குரல் கொடுத்துவரும் சமூகநீதிக் கொள்கைக்கு அல்ல. அவரை வாழ்த்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ராஜா, அரிபிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரிகள், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

புதன், 6 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon