மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

சின்னத்தம்பி யானையைப் பிடிக்க நடவடிக்கை: அமைச்சர்!

சின்னத்தம்பி யானையைப் பிடிக்க நடவடிக்கை: அமைச்சர்!

விரைவில் சின்னத்தம்பி யானை தமிழக வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.

கோவை மாவட்டம் வரப்பாளையம், பெரிய தடாகம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பயிர்ச்சேதம் ஏற்படுத்தி வந்தன சின்னத்தம்பி, விநாயகன் என்ற இரண்டு யானைகள். கடந்த டிசம்பர் மாதம் விநாயகன் தமிழக வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு முதுமலை காட்டில் விடப்பட்டது. இதன் பின்னர், கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கப்பட்டது சின்னத்தம்பி யானை. இந்த யானை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் ஜனவரி 31ஆம் தேதியன்று அப்பகுதியிலுள்ள அங்கலக்குறிச்சி என்னும் ஊருக்குள் சின்னத்தம்பி யானை புகுந்தது. இதன் தொடர்ச்சியாகத் தற்போதுவரை அதைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சிகளை தமிழக வனத் துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கும்கி யானைகளுடன் சின்னத்தம்பி யானை விளையாடி வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த முயற்சிக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று (பிப்ரவரி 6) சின்னத்தம்பி யானை இருந்துவரும் உடுமலை கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றார் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். அங்கு ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், சின்னத்தம்பி யானையைப் பிடிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“சர்க்கரை ஆலைப் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை பொதுமக்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை. தற்போது அது விவசாயப் பயிர்களுக்கும் வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்துவதாகத் தகவல் வந்துள்ளது” என்று கூறினார். தமிழக வனத் துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, விரைவில் யானையைப் பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

புதன், 6 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon