மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

மோடி முடக்கிய 15 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள்: தேர்தலில் எதிரொலிக்குமா?

மோடி முடக்கிய 15 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள்:  தேர்தலில் எதிரொலிக்குமா?

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியாவில் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கின்றன என்று முக்கிய தொண்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்திருக்கின்றன.

இதுபற்றி அல் ஜசீரா ஊடகம் நேற்று வெளியிட்டிருக்கும் செய்தியில் கிரீன் பீஸ், ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் போன்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் தரப்பிலான இந்திய அரசு மீதான புகார்கள் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மீதான பிடி இறுகத் தொடங்கியது. ‘கிறிஸ்துவ மெஷினரிகளின் இந்தத் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் சேவை என்ற பெயரில் மத மாற்றத்தையும், ஆங்காங்கே ஸ்பான்சர்டு போராட்டங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. வெளிநாட்டு நிதி விவகாரத்தில் தொண்டு நிறுவனங்கள் பல முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. இவற்றை முறைப்படுத்த வேண்டும்’ என்பது பாஜகவின் நீண்ட கால குற்றச்சாட்டு மற்றும் கோரிக்கை. இதை மோடி பிரதமரானவுடன் தீவிரமாக செயல்படுத்தி வந்திருக்கின்றனர். இதுதான் இப்போது அரசுக்கே ஒரு முக்கியப் பிரச்சினையாக சர்வதேச அரங்கில் எழுந்திருக்கிறது.

க்ரீன் பீஸ் தொண்டு நிறுவனம் இந்தியாவில் இந்த மாதத்தில் மட்டும் (பிப்ரவரி 2019) இரண்டு மண்டல அலுவலகங்களை மூடியிருக்கிறது. அதன் பெங்களூரு அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டு மற்றும் வங்கிக் கணக்கு முடக்கத்தால் அதன் பல பணியாளர்கள் வேலை இழந்துவிட்டனர்.

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மன்னிப்பு சபை இந்தியாவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் இந்த அமைப்பின் இந்தியத் தலைமை அலுவலகத்தில் 12 மணி நேர ரெய்டு நடைபெற்றது. அதன் பிறகு அரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்த தொண்டு நிறுவனம் 260 மில்லியன் ரூபாய்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து போலி நிறுவனங்கள் மூலமாகப் பெற்றிருக்கிறது என்று குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் மோடி அரசு மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை கிரிமினல்கள் போல நடத்துவதாக ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்திய செயல் இயக்குனர் அக்கார் பட்டேல் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் பற்பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. குடிநீர் பிரச்சினைகள், குழந்தைகளின் கல்வி, மின்னணு கழிவுகள் அகற்றம் என முக்கியப் பிரச்சினைகளில் அரசோடு இணைந்து பல ஆண்டுகளாக தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் தனது மனித உரிமை மீறல்களை மறைப்பதற்காக இப்படி சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்துவதாகச் சொல்கிறார்கள் விமர்சகர்கள்.

“இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு முதல் சுமார் 15 ஆயிரம் அறக்கட்டளைகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை வெளிநாட்டு நிதிபெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் தாங்கள் பெற்ற நிதி பற்றிய முறையான வருமான வரிக் கணக்குகளையும், மற்ற ஆவணங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் அரசுக்கு அளிக்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு கடந்த வருடம் மக்களவையில் தெரிவித்தார்.

இந்திய மனித உரிமை ஆய்வாளரும் பொருளாதார நிபுணருமான ஜயதி கோஷ் இதைச் சுட்டிக் காட்டி, “அரசு தன் மீதான விமர்சனங்களை சகித்துக் கொள்ளும் பக்குவமின்மையின் வெளிப்பாடுதான் இது. வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களில் நிதி முடக்கப்பட்டு அவை செயலற்றதாக்கப்படும் நிலையில் இந்து தேசிய நிறுவனங்களான ஆர் எஸ் எஸ் போன்ற வலது சாரி தொண்டு நிறுவனங்கள் இந்த ஆண்டுகளில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கின்றன. அவர்களும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் பாதிப்பு நடப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்து ஆதரவு வலது சாரி தொண்டு நிறுவனங்களுக்கு இந்த ஆட்சியில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை” என்கிறார் கோஷ்.

அனைத்திந்திய கத்தோலிக் யூனியன் முன்னாள் தலைவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஜான் தயாள், “கிறிஸ்துவ மெஷினரிகள் இந்தியாவில் நீண்ட காலமாக கல்வி, மருத்துவம், கிராமங்கள் முன்னேற்றம் என பல வகைகளில் செயல்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இப்போது அவை குறைந்தபட்ச நிதிஉதவியைக் கூட வெளிநாடுகளில் இருந்து பெற முடியவில்லை. அதனால் பல மருத்துவ மையங்கள், ஆதரவற்றோர் விடுதிகள் மூடப்பட்டு விட்டன. இதனால் பாதிக்கப்படுவது அவற்றால் உதவி பெற்று வந்த மக்கள்தான்” என்று கூறுகிறார்.

ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலியின் புகார் காங்கிரஸ் பக்கமும் செல்கிறது.

“முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் 2008 ஆம் ஆண்டு வெளிநாட்டு உதவிகள் முறைப்படுத்தும் சட்டத்தில் ஒரு முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தொண்டு நிறுவனங்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள அரசிடம் மறு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்தது. அதையே பயன்படுத்தி 2014 ஆம் ஆண்டு வந்த மோடி அரசு தொண்டு நிறுவனங்களைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்கிறார்.

அதேநேரம் இந்தியத் தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜய் கருணா இந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டு உதவிகள் மூலம் இந்தியாவில் தொண்டு செய்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பல அமைப்புகள் அதை முற்றிலும் தொழிலாக வணிகமாக ஆக்கிவிட்டன. புரவலர்களின் நிதியை, நிலத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதை மாற்ற இந்திய அரசு உள்நாட்டு கொடைகளைப் பயன்படுத்தி உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்கள் வளர்வதற்கு ஊக்கம் தர வேண்டும். மோடி அரசின் சட்ட ரீதியான நடவடிக்கையை அந்தத் தொண்டு நிறுவனங்கள் அரசியல் ஆக்கி வருகின்றன” என்று கூறுகிறார் விஜய் கருணா.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆம்னஸ்டி இண்டர் நேஷனல் அமைப்பின் செயல் இயக்குநர் அக்கார் பட்டேல்,

“நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஓர் அரசோ அல்லது ஒற்றை மனிதரோ எங்களைப் போல நீண்ட கால சேவையில் ஈடுபட்டிருக்கும் தொண்டு நிறுவனங்களை முடக்கிவிட முடியாது என்றே கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

“ நாட்டின் பாதுகாப்புத் துறை வரை அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் அரசு, கிராமப் புற முன்னேற்றத்திலும் மருத்துவத்திலும் சுகாதாரத்திலும் வெளிநாட்டு உதவியோடு தொண்டு நிறுவனங்கள் ஆற்றும் பணியை முடக்குவதற்குக் காரணம் அற்ப மத அரசியல்தான். இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களும் தேர்தலில் எதிர்வினையாற்றக் கூடும்” என்கிறார்கள் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வேலை இழந்திருக்கும் இளைஞர்கள்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தத் தொண்டு நிறுவனங்களின் பிரச்சினை மோடிக்கு சர்வதேச அளவில் கண்ணுக்குத் தெரியாத ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் கண்ணுக்குத் தெரிந்தே நாட்டுக்குள் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon