மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

5 நாட்கள்-10 மாநிலங்கள்: மோடியின் தொடர் பயணம்!

5 நாட்கள்-10 மாநிலங்கள்: மோடியின் தொடர் பயணம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாளைமுதல் 5 நாட்களுக்கு 10 மாநிலங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள், திட்டப்பணிகள் துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பிரதமர் மோடி பல மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்தவகையில் ஜனவரி 27ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வந்திருந்தார். இங்கிருந்து கேரளாவிற்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். கடந்த வாரத்தில் மேற்கு வங்கம், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டார்.

இதையடுத்து பிப்ரவரி 8 முதல் 12 வரை 5 நாட்களுக்கு 10 மாநிலங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொள்கிறார். இதில் 8ஆம் தேதி 3 மாநிலங்களுக்கு மோடி செல்லவுள்ளார். முதலாவதாக சத்தீஸ்கரில் உள்ள ரைகர் பகுதியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்துகொள்கிறார். சத்தீஸ்கர் மாநில சட்ட மன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்முறையாக மோடி அங்கு செல்கிறார். இதனையடுத்து மேற்கு வங்கம் ஜல்காபூரில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். சிபிஐ ரைய்டுகள், பாஜக தலைவர்களுக்கு மேற்கு வங்கத்தில் அனுமதி மறுப்பு கடந்த வாரத்தில் தலைப்புச் செய்தியாக இருந்த மேற்கு வங்கத்துக்கு மோடி மீண்டும் இந்த வாரத்தில் செல்கிறார். அன்று இரவு அசாமில் தங்குகிறார்.

பிப்ரவரி 9ஆம் தேதி கவுகாத்தியில் பிரம்மபுத்திரா பாலம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் விதமான எரிவாயு குழாய்கள் துவக்க விழாவில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு அன்றைய தினமே அருணாசலப் பிரதேசத்தில் புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். திரிபுராவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்.

பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்றைய தினம் கர்நாடகாவின் ஹுப்பள்ளி மற்றும் ஆந்திராவின் குண்டூர் பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களிலும் மோடி கலந்துகொள்கிறார். 11ஆம் தேதி அக்‌ஷயபாத்ரா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா செல்கிறார். இந்த நிறுவனமானது நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது. இந்த நிகழ்வில் மோடி சில குழந்தைகளுக்கு உணவு பரிமாறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். பிப்ரவரி 12ஆம் தேதி ஹரியானா மாநிலத்தின் குருஷேத்ராவில் ஸ்வச் ஷக்தி திட்ட நிகழ்வில் மோடி கலந்துகொள்கிறார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon