மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

ஆடை சுதந்திரம்: ஏ.ஆர்.ரஹ்மான் பதில்!

ஆடை சுதந்திரம்: ஏ.ஆர்.ரஹ்மான் பதில்!

ஆடை சுதந்திரம் தொடர்பாகத் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதைக் கொண்டாடுவதற்கான விழா பிப்ரவரி 5 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர். அப்போது, தனது தந்தை பற்றி மிக உணர்ச்சிகரமாக பேசினார். கதீஜா பேசுகையில், “உங்களது இசைக்காகவும், நீங்கள் பெற்ற விருதுக்காகவும் உங்களை இந்த உலகம் அறியும். ஆனால் எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்காக நான் உங்கள் மீது அதீத அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். உங்களது பணிவுதான் எனக்கு மிகவும் பிடித்தது. ஆஸ்கர் விருது வென்ற பிறகும் உங்களது குணத்தில் அணு அளவுகூட மாற்றமில்லை” என்று பெருமையாகப் பேசினார்.

இது ஒருபுறமிருக்க, அத்தகைய முக்கிய நிகழ்ச்சியிலும் ரஹ்மானின் மகள் முகத்தைக்கூட மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் பழைமைவாதத்தை கடைப்பிடிக்கிறார் என்று பலரும் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிதா அம்பானியுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி மற்றும் மகள்கள் நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், “எனது குடும்பப் பெண்கள் நிதா அம்பானியுடன் இருந்தபோது” என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். மேலும், அவரவர் ஆடையைத் தேர்வு செய்துகொள்வதற்கான சுதந்திரம் அவரவர்க்கு உண்டு என ஹேஷ்டேகில் தெரிவித்திருந்தார். அவர் பதிவிட்டிருந்த படத்தில் அவரது குடும்பப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் விருப்பப்படி ஆடை அணிந்திருந்தனர்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon