மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

மதுரையின் வரலாற்றை அறிய ஒரு பயணம்!

மதுரையின் வரலாற்றை அறிய ஒரு பயணம்!

பசுமை நடை அமைப்பு நடத்தும் தொல்லியல் திருவிழா மதுரையில் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இந்நிகழ்வில் காலை மதுரைக்கு அருகில் உள்ள கீழக்குயில்குடி சமணமலையில் பசுமை நடையும் மாலை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கீழடி குறித்த புகைப்படக் கண்காட்சியும், உரைநிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் நடைபெறுகின்றன.

மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு தொல்லியல் சின்னங்களுக்கு மாதம் ஒருமுறை பயணம் மேற்கொண்டு வருகிறது பசுமை நடை அமைப்பு. நூறாவது நடையை ஒட்டி நடத்தப்படும் இந்தத் தொல்லியல் விழா குறித்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசினோம். பசுமை நடையின் தோற்றம் குறித்து எழுத்தாளர் சித்திரவீதிக்காரன் பேசினார்.

“மதுரைக்கு அரணாக, அழகாக வீற்றிருக்கும் யானைமலையை அறுத்துச் சிற்ப நகராக்குகிறோம் என்று அறிவித்தார்கள். நல்லவேளை அப்பகுதி மக்கள் விழிப்படைந்து போராடி அதைத் தடுத்து நிறுத்தினார்கள். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் யானைமலை குறித்து மிக விரிவாக ‘யானைமலையைச் சூழ்ந்த தீவினை’ என்ற கட்டுரையை உயிர்மை இதழில் எழுதினார். மதுரை புத்தகத்திருவிழா நடந்து கொண்டிருந்த சமயம் என்பதால் அங்கு வந்த வாசகர்கள் அவரிடம் யானைமலையிலுள்ள வரலாற்றுச் சின்னங்களை பார்க்க விரும்புவதாகக் கூறினர். ஒரு நாள் அதிகாலை முப்பது, நாற்பது நண்பர்கள் சேர்ந்து யானைமலையிலுள்ள சமணச்சிற்பங்கள், கல்வெட்டுகள், குடைவரைகளைப் போய் பார்த்தனர். அந்த இடத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்ல பேராசிரியர் சுந்தர்காளியும் சென்றிருந்தார். இதுபோல மதுரையிலுள்ள எல்லா மலைகளின் வரலாற்றையும் அறிந்தால் நன்றாகயிருக்குமே என அவர்கள் நினைத்த போது உதயமானது பசுமைநடை” என்று கூறினார்.

வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களைப் பார்த்ததும் அந்த இடத்தின் வரலாறு, சிறப்பு குறித்து துறை சார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் எடுத்துரைக்கிறார்கள். இந்தக் குழுவில் தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், பேரா. சுந்தர்காளி, பேரா. கண்ணன், ஓவியர்கள் ரவி, பாபு உள்ளிட்டோர் இருக்கின்றனர். அந்த இடத்தின் வரலாறு குறித்த கைப்பிரதி பயணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருப்பமானவர்களிடம் நன்கொடையும் பெறப்படுகிறது.

பசுமை நடையின் சிறப்பம்சம் குறித்துப் பேசிய சித்திரவீதிக்காரன், “பொதுவாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக அல்லாமல் குடும்பம், குடும்பமாக மக்களை வரவைத்தது பசுமைநடை. அதிலும் எல்லா வகையான மக்களும் ஒன்றாகச் சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன் என எல்லோரும் ஒற்றுமையாக வரலாற்றை அறிய, அதைக்காக்க வரவைத்தது பசுமைநடை. தொல்லியல் சார்ந்த புத்தகங்களின் விற்பனை பொதுவாக மந்தமாக இருக்கும். அப்படியிருக்கையில் பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு நான்காயிரம் பிரதிகள் வரை விற்பனையாகியுள்ளது. மேலும், நீரின்றி அமையாது உலகு, பசுமைநடையாக பயணித்த அனுபவங்களை வந்தவர்கள் எழுதிய காற்றின் சிற்பங்கள், ஆங்கிலத்தில் History of Madura என பசுமைநடை வெளியீடுகள் எல்லாவற்றையும் விரும்பி வாங்கி வாசிக்கும் நூற்களாக மாற்றியது பசுமைநடையின் சாதனை” என்று கூறினார்.

9 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பசுமை நடையின் முக்கிய நிகழ்வு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon