மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

10 %: பின்வாங்கும் அதிமுக!

10 %: பின்வாங்கும் அதிமுக!

10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டமாகியுள்ள நிலையில், அதை தற்போது எதிர்க்க வேண்டிய நோக்கமில்லை என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் பி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அடிப்படையில் முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முன்னேறிய சமூகத்தினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை இத்தீர்மானத்துக்கு எதிராகக் கடுமையான முறையில் மக்களவையில் குரல் எழுப்பினார். ஆனாலும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு மட்டும் செய்தார். இந்த சூழலில் அதிமுக எம்பி பி.வேணுகோபால் தி இந்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டி 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்த அதிமுகவின் நிலைக்கு நேர்மாறாக அமைந்துள்ளது.

சமூக நீதி மற்றும் சம வாய்ப்பு வழங்கப்படுவதற்கு எதிராக நாங்கள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி இந்து ஆங்கில ஊடகத்திடம் அவர் மேலும் கூறுகையில், “பொருளாதார அடிப்படையில் முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு வழங்குவது சட்டமாகி விட்ட நிலையில் அதை எதிர்ப்பதில் எந்த நோக்கமும் இல்லை. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழகத்தைப்போல 69 விழுக்காடாக உயர்த்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கான போஸ்ட் மேட்ரிக் உதவித் தொகை திட்டத்துக்கான நிதியில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.958.5 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon