மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

தேர்தல்: இளைஞர்களை குறிவைக்கும் காங்கிரஸ்!

தேர்தல்: இளைஞர்களை குறிவைக்கும் காங்கிரஸ்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களை கவரும் விதமாக, இளைஞர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமான வாக்குறுதிகளை அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் தற்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி இளைஞர்களை குறிவைத்து தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களுக்கான 100 நாள் வேலை உறுதித் திட்டம், மழலையர் கல்வி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையில் பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, இடை நிற்றலை முழுமையாக தடுக்க நிதி, மாணவர்கள் உரிமைகள் ஆணையம், உள்ளாட்சி அமைப்புகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காங்கிரஸ் வாக்குறுதியில் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த செயற்பாட்டாளர் ஒருவர் தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “வேலைவாய்ப்பு உத்திரவாதம் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதியில் ஒன்றாக இருக்கும். நகர்ப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துடன் குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டத்தை செயல்படுத்தவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வாக்குறுதியும் பொருளாதார நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாக்குறுதிகளின் நிதியியல் தாக்கங்களை ஆய்வு செய்தபின் மட்டுமே இந்த திட்டங்கள் இறுதி செய்யப்படுகின்றன” என்றார்.

மேலும், “இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற எண்ணம் அவர்களிடம் வளர்ந்து வருகிறது. கட்டணம் செலுத்த முடியாமல் கல்வி கற்பதிலிருந்து இடை நிற்பது,தேர்வுகளை உரிய நேரத்தில் நடத்தாதது, முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். கல்வி சீர்திருத்தங்களுக்கான உயர்ந்த கொள்கைக்கான செயல்திட்டங்கள் வகுக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த முடியாமல் யாரும் இடைநிற்கக் கூடாது. கல்வியில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். தேர்வுகளை நடத்துவதிலும், தேர்வு முடிவுகளை அறிவிப்பதிலும் ஏற்படும் தடைகள் மற்றும் தாமதங்களை சரிசெய்ய மாணவர்கள் உரிமைகள் ஆணையம் அமைக்க வாக்குறுதி அளிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon