விஜய் தேவரகொண்டாவின் வாழ்க்கை கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் 30 வயதுக்குள்ளானவர்களுக்கான பட்டியலில் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இடம்பெற்றார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே நடிகர் இவர் மட்டுமே ஆவார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றது குறித்து விஜய் தேவரக்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய 25ஆவது வயதில் என்னுடைய ஆந்திரா வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை ரூ.500 இல்லாததால் என்னுடைய கணக்கு முடக்கப்பட்டது. 30 வயதுக்குள் செட்டில் ஆகிவிட்டால் இளம் வயதிலேயே வெற்றியை கொண்டாடலாம் என்று எனது தந்தை கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஃபோர்ப்ஸ் பட்டியலில் நான்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த ட்வீட்டை பார்த்த இயக்குநர் மோகன் ராஜா பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் ட்வீட்டுக்கு பதிலளித்த மோகன் ராஜா, “இந்த ட்வீட் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. இது ஒரு நல்ல திரைக்கதையாக அமையும் என நினைக்கிறேன். பின்னர் நீங்கள் காப்புரிமை கேட்டு முறையிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் சகோதரரே” என்று தெரிவித்தார். மோகன் ராஜாவுக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “அப்படியென்றால் நீங்கள் எனக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். நான் நீதிமன்றத்தில் முறையிட மாட்டேன். மிக்க நன்றி அண்ணா” என்று தெரிவித்துள்ளார். மோகன் ராஜா தற்போது தனி ஒருவன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டாவும் இருப்பார் என நம்பலாம்.